
Written by: JBR
கிராம தெய்வங்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை பொங்கலிடுவார்கள். அந்த பத்து நாள்களும் ஜனம் கோயிலில் ஒன்று கூடும். ஒட்டடைகள் அடித்து கோயில் புதுப்பிக்கப்படும். படையலும் பலிகளுமாக பத்து நாள்களும் கொண்டாட்டங்கள் தூள் கிளப்பும்.
திருவிழாவுக்கு மறுநாள் கிராம கடவுளின் கோயில் மீண்டும் தனிமையில் விடப்படும். ஒட்டடைகள் அடையும். மழையிலும் வெயிலிலும் அடுத்த திருவிழா வரை காவல் தெய்வம் தனித்து விடப்படும்; கவனிப்பார் இல்லாமல்!
நடிகர் திலகத்தையும் கிராம தெய்வத்தை போல் மறந்துவிட்டார்களா தமிழர்கள்? முக்கியமாக நடிகர் சங்கம்? புதுச்சேரி அரசு சிவாஜிக்கு சிலை அமைத்ததை தொடர்ந்து மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது நடிகர் சங்கம். "நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதாக நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் கூறி வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் இதுவரை நடிகர் சங்கம் முன்னெடுக்கவில்லை." ஆவேசமாக குற்றஞ்சாட்டுகிறார்கள் சிவாஜி ரசிகர்கள்.
தேர்தல் நெருங்கும் நேரம் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டாததை விஜயகாந்துக்கு எதிரான ஆயுதமாக்கி பிரச்சாரத்தை முடுக்கியுள்ளது அரசியல் கட்சி ஒன்று. நடிகர் சங்கத்தின் நிதி உதவி இல்லாமலே மணிமண்டபத்தை கட்டமுடியும் என்று கூறியிருக்கிறார் சிவாஜியின் மூத்தமகன் பிரேம்குமார்.
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதில் என்ன சிக்கல்? சிக்கலுக்கான காரணகர்த்தாக்கள் யார்? எப்போது கட்டி முடிக்கப்படும் மணிமண்படம்?
2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி சிவாஜி மறைந்ததற்கு சில மாதங்கள் கழித்து, நடிகர் திலகத்துக்கு மணிமண்டபம் அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்வினையாற்றியது 2002-ம் ஆண்டு செப்டம்பரில். சென்னை அடையாறில் 0.65 ஏக்கர் நிலம் மணிமண்டபம் கட்ட ஒதுக்கியிருப்பதாக அறிவித்தது தமிழக அரசு. சத்யா ஸ்டுடியோவுக்கு எதிரில் உள்ளது இந்த இடம்.
இடம் ஒதுக்கியாகிவிட்டது, இனிமண்டபம்தான் என ரசிகர்கள் மனப்பால் குடித்துக்கொண்டிருக்க, கிணற்றில் போட்ட கல்லாக எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது மணிமண்டப வேலை. மீண்டும் சர்ச்சைகள்... மீண்டும் பேச்சு வார்த்தைகள்!
நீதிபதிகள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு செல்லும் சாலை வழியில் மணிமண்டபத்துக்கு ஒதுக்கிய நிலம் இருப்பதாக கூறப்பட்டது. இந்தப்பிரச்சனை சட்டசபைக்கு வந்தபோது குறுக்கு சாலைக்கான பணத்தை நடிகர் சங்கம் கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்கம் பணத்தை கட்டியது. சாலை பிரச்சனையும் சரிசெய்யப்பட்டுவிட்டது.
இதையடுத்து மீண்டும் மணிமண்டப வேலை சுறுசுறுப்படைந்தது. கடந்த ஆண்டு மே 22 மணிமண்டபம் கட்டும் இடத்தில் நடிகர்சங்கம் சார்பில் பூமி பூஜை போடப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜயகாந்த், "மண்டபத்துக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் (ஜூன்) துவங்கி நான்கே மாதங்களில் கட்டி முடிக்கப்படும்" என்றார்.
அவர் அறிவித்து மாதங்கள் பல கடந்துவிட்டன. இதுவரை மண்டபத்துக்காக ஒரு கல்கூட எடுத்து வைக்கவில்லை. ஏன் இந்த தாமதம்?
"விஜயகாந்த் எம்.ஜி.ஆர். ரசிகர். அவருக்கு சிவாஜியை பிடிக்காது. எனவேதான் மண்டபம் கட்டுவதை வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறார்."- இது சிவாஜி ரசிகர்களின் பகிரங்க குற்றச்சாட்டு.
நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்றபோது இருந்த சுறுசுறுப்பும் சங்க வேலைகளில் அவர் காட்டிய ஆர்வமும் இப்போது சுத்தமாக அவரிடம் இல்லை. கட்சி துவங்கிய பின் அவரது முழுக்கவனமும் அரசியல் மீது தாவிவிட்டது. சங்கத்தின் முக்கிய பிரச்சனைகளுக்கான விவாதத்திலும் அவர் கலந்து கொள்வதில்லை.
இவையனைத்தும் உண்மையாக இருந்தாலும் மண்டபவேலை நடைபெறாமல் இருப்பதற்கு அவரை மட்டுமே குறைகூற முடியாது. நடிகர் சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு மண்டபம் கட்டுவதில் உண்மையான ஆர்வம் இருந்திருந்தால் சங்க தலைவரின் விருப்பு வெறுப்பு ஒரு பொருட்டல்ல. மண்டபம் கம்பீரமாக இந்நேரம் எழுந்திருக்கும்.
நடிகர் திலகத்தின் மீது மனதளவில் மதிப்பும் மரியாதையும் உள்ளவர்கள் அதை செயல்வடிவில் கொண்டுவரும் அர்ப்பணிப்பு இல்லாமல் இருப்பது முதல்காரணம்! இரண்டாவது பணம். மணிமண்டபம் கட்டுவதற்கான நிதியை நடிகர் சங்கம் இனிமேல்தான் திரட்டியாக வேண்டும். ஆனால் அதற்கும் வழி பிறந்திருக்கிறது. இதுபற்றி சிவாஜியின் மூத்தமகன் பிரேம்குமார் அளித்துள்ள பேட்டி முக்கியமானது.
"மணிமண்டபம் கட்ட லட்ச லட்சமாய் பணம் கொடுக்க உலகம் முழுவதும் அப்பாவின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். எங்கள் குடும்பத்திலிருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கொடுக்கவும் தயாராக உள்ளோம்!"
ஆனால், பணம் திரட்டினாலும் மண்டப பணி துவங்கிவிடாது. மண்டபத்தை எப்படி என்னென்ன வசதிகளுடன் அமைப்பது என்ற பிளான் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அண்ணா, எம். ஜி.ஆர். சமாதிகளை போல பளிங்கில் அலங்கார வளைவு அமைத்து மண்டபம் ஒன்றை கட்டுவதே பலரது எண்ணம். ஆனால், பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் உபயோகமான முறையில் மணிமண்டபம் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர் சிவாஜி குடும்பத்தினர்.
"நூலகம், அப்பாவின் படங்கள், நினைவுச் சின்னங்கள், பரிசுகள், விருதுகள் அடங்கிய மியூசியம் உள்பட பல உபயோகமான விஷயங்கள் உள்ளடக்கியதாக மண்டபம் அமையவேண்டும்" என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்துகிறார் ராம்குமார்.
ரஜினி, கமல் இருவருக்கும் மண்டபம் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து இருவேறு கருத்துக்கள் இருப்பதாகவும் கூறுகிறார் இவர்.
இப்படி பல்வேறு பிரச்சனைகளுடன் கிடப்பில் போடப்பட்ட மணிமண்டப பேச்சு புதுச்சேரி அரசு சிவாஜிக்கு சிலை திறந்ததை அடுத்து மீண்டும் அரங்கிற்கு வந்திருக்கிறது. ஒரு கோஷ்டி இதை விஜயகாந்தின் தோல்வியாக பிரகடனம் செய்து அரசியல் ஆதாயம் தேடுகிறது.
இருக்கும் காலம் வரை கலைக்கு சேவை செய்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு இது எல்லாவகையிலும் அவமரியாதையானது. வருடத்தில் ஒருநாள் மட்டும் படையல் போடப்படும் பழந்தெய்வம் மாதிரி பிறந்த, இறந்த தினங்களில் மட்டுமே நினைவு கூரப்படும் சடங்காகிவிட்டார் நடிகர் திலகம். வெகு விரைவில் இதற்கொரு விடிவுகாலம் ஏற்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்! |
Feedback!
|
|