
Written by: JBR
நம் ஜனநாயக நாட்டின் பல்வேறு விசித்திரங்களுள் ஒன்று, லோ-பட்ஜெட் படங்களுக்கு அரசு அளிக்கும் மானியம். வேறு எந்த துறைக்கும் - சரியாக சொல்வதென்றால், வேறு எந்த வியாபாரத்துக்கும் இந்த சலுகை அளிக்கப்படுவதில்லை.
தயாரிப்பாளர்கள் சங்கம் நீண்ட நாள்களாக தமிழக அரசை கேட்டுக்கொண்டதற்கிணங்க, லோ-பட்ஜெட் படங்களுக்கான மானியத்தை ஏழு லட்சங்களாக உயர்த்தி அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்ட மறுநாளே மானிய தொகை உரியவர்களுக்கு அளிக்கப்பட்டது இன்னொரு ஆச்சரியம்!
இந்த சலுகை ஏற்புடையதுதானா?
தமிழகத்தில் தொழில் செய்யும் எவருக்கும் இதுபோன்று வருடாவருடம் மானியம் வழங்கப்படுவதில்லை. பிறகு ஏன் சினிமா துறைக்கு மட்டும் இந்த கரிசனம்?
காரணம், சினிமா ஒரு கலை!
மானியம் வாங்குகிறவர்கள் சொல்லும் இந்த 'கலை' சால்ஜாப்பு ஏற்புடையதா என்றால், நிச்சயம் இல்லை! சினிமாவை பணம் பண்ணும் வியாபாரமாக நினைப்பவர்களே தமிழ்சினிமாவை ஆக்ரமித்துள்ளனர். மக்களின் மலிவான ரசனைகளை கொச்சையான முறையில் தூண்டி பணம் பண்ண நினைப்பவர்கள் இன்று சினிமாவில் அதிகம். மலிவான... கொச்சையான என்ற பதங்களை பாலியலுடன் மட்டும் தொடர்புப்படுத்துவது சரியல்ல. வெகுஜனங்களின் காதலை, குடும்ப சென்டிமெண்டை, மத உணர்வை, சாதி வெறியை.... இன்னும் பட்டியலிட முடியாத பல்வேறு உணர்வுகளை தவறான முறையில் தூண்டும் படங்களே இன்று மிகுதியான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகின்றன.
மேலும், சினிமாவுக்கு திருட்டு வி.சி.டி. போன்ற நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம், தங்களின் தொழில் நசிந்துவிட்டதாக இவர்கள் கூச்சலிடுவது தவறாமல் நடக்கும் ஒன்று. அங்கீகாரம்... விருதுகள்... மானியங்கள் என்று வரும்போது சினிமாவை கலை என்று தூக்கிப்பிடிப்பவர்கள், நெருக்கடிகளின்போது சினிமாவை தொழிலாக பிரகடனப்படுத்துகிறார்கள். சினிமா தயாரிக்க அரசு கடன் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் இவர்களிடமிருந்து எழுப்பப்பட்டதை நினைவில் கொள்வது முக்கியமானது.
அரசின் மானியத்தை பெறும் 90%படங்கள் கலைக்கான எந்த தடயங்களும் இல்லாமலிருப்பது கண்கூடு. லோ-பட்ஜெட் படங்களாக அடையாளம் காட்டப்படும் இந்த படங்கள் பட்ஜெட்டில் மட்டுமல்லாது தரத்திலும் லோ-வாகவே உள்ளன. அதே நேரம், தகுதியான பல படங்கள் இந்த மானியத்தை பெறமுடியாமல் இருப்பது, வேதனை. செய்தி துறையின் திரைப்படம் தொடர்பான தவறான விதிமுறைகளே இதற்கு காரணம் என்கிறார் எடிட்டரும் இயக்குனருமான பி. லெனின்.
அரசு அறிவித்த, 2004-2005 ம் ஆண்டுகளுக்கான விருது பட்டியலில் லெனினின் 'றெக்கை' படமும் இடம் பெற்றிருந்தது. சென்றமாதம் 23-ந் தேதி முதல்வர் கையால் 'றெக்கை' படத்துக்கு சிறந்த படத்துக்கான இரண்டாம் பரிசை பெற்றுக்கொண்டார் இவர். அப்போது முதல்வரிடம் லெனின் வெள்ளை கவர் ஒன்றை கொடுத்தார். அப்படி என்ன அந்த கவரில்?
ஆர்வமாக யோசித்தவர்களுக்கு மறுநாள் விடை கிடைத்தது. பிலிம்சேம்பரின் முன்னால் உண்ணாவிரதம் மற்றும் மவுன விரதம் இருந்தார் லெனின். பல்வேறு விருதுகள் பெற்ற ஒருவர்... பழம்பெரும் இயக்குனர் பீம்சிங்கின் மகன், திடீரென்று இப்படியொரு போராட்டத்தை துவக்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது வியப்பில்லை. மாலையில் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகே, பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்தார் லெனின்!
தமிழக அரசின் விருது பெற்ற இவரது 'றெக்கை' படம் மானிய கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், பல்வேறு விதிகளை கூறி மானியத்துக்கு 'றெக்கை' தகுயில்லை என திருப்பி அனுப்பியது மானிய கமிட்டி.
அப்படி என்ன விதிமுறைகள்?
லோ-பட்ஜெட் படம் என்றாலும், படத்துக்கு குறைந்தது எட்டு பிரிண்டுகளாவது போட்டிருக்க வேண்டும்.
படம் ஓடும் நேரம் இரண்டு மணிநேரங்களாவது இருக்கவேண்டும்.
இந்த இரண்டு விதிமுறைகளும்தான் கமிட்டி 'றெக்கை'யை நிராகரிக்க காரணம். இது குறித்து பேசும்போது, "ஒரு படத்துக்கு எட்டு பிரிண்டுகள் இருந்தால் மட்டுமே மானியம் என்று விதி மத்திய அரசில் கிடையாது. பக்கத்து மாநிலம் கர்நாடகாவிலும் இந்த விதிமுறை இல்லை. அரசு ஒரு படத்துக்கு தரும் மானியம் ஏழு லட்ச ரூபாய். 'றெக்கை' படத்துக்கு எட்டு பிரிண்டுகள் போட்டால், அதற்கே ஏழுலட்சங்கள் ஆகிவிடும்" என எதார்த்தத்தை எடுத்து கூறுகிறார் லெனின்.
மேலும், 70 நிமிடங்கள் படம் ஓடினாலே, மானியத்துக்கு அது தகுதியானது என்ற விதிமுறையே மத்தியிலும் கர்நாடகாவிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஜான் ஆபிரஹாம் இயக்கிய 'அக்ரஹாரத்தில் கழுதை' திரைப்படம் ரிலீஸ் ஆகாமலே மத்திய அரசின் விருது பெற்றதையும் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.
செய்தி துறையின் திரைப்படம் தொடர்பான தவறான விதிமுறைகளை பரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை மனுவையே முதல்வரிடம் கொடுத்திருக்கிறார் லெனின். முதல்வர் ஜெயலலிதா கடைசியாக நடித்த 'நதியை தேடிவந்த கடல்' (1981) திரைப்படத்தை லெனின்தான் இயக்கியிருந்தார். தவிர, பீம்சிங்கின் மகன் என்ற மரியாதையும் முதல்வருக்கு இவர் மீது உண்டு. ஆகவே, பாஸிட்டிவான பதில் கிடைக்கும் என நம்புகிறார்கள் லெனினின் கோரிக்கையை ஆதரிப்பவர்கள்.
அதேநேரம், தமிழக அரசு திரைப்பட விருது மற்றும் மானியப்பட தேர்வு கமிட்டியில் உள்ள முக்தா சீனிவாசன் முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், தேர்வுக்கு வந்த மற்ற எல்லா லோ-பட்ஜெட் படங்களைவிட லெனினின் 'றெக்கை' அனைத்து வகையிலும் சிறந்ததாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சினிமாவுக்கு மானியம் என்பதே ஏற்கமுடியாத ஒன்று. இதில், அசலான கலைப்படங்களை விதிமுறைகளை சொல்லி தட்டிக்கழித்து, கழிசடைகளுக்கு மானியம் அளிப்பது வேதனையிலும் வேதனை.
முதல்வர் இதற்கொரு நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் உண்மையான கலை ஆர்வலர்கள்!
|
Feedback!
|
|