
Written by: JBR
2005-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களின் பட்டியல் சென்றமாத இறுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை பார்க்கும் ஒருவருக்கு உடனடியாக தோன்றும் கேள்வி: "கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களைத் துறந்து மனிதத்துக்கு மாறுகிறதா ஹாலிவுட்?"
ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் சிறந்த படத்துக்கான போட்டியில் 'டைட்டானிக்', 'தி அவைட்டர்' போன்ற பிரமாண்டங்கள் தவறாமல் இடம் பெறும். இந்த முறை இதுபோன்ற கிராபிக்ஸ் கலக்கல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மாறாக மனித உறவுகளின் சிக்கல்களை நுணுக்கமாக காட்சிப்படுத்திய ஐந்து திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமானது 'BROKE BACK MOUNTAIN'
ANG LEE இயக்கிய இந்தப் படம் இரண்டு கெளபாய்களை பற்றியது. நண்பர்களான இவர்களுக்குள் நட்பை மீறிய நெருக்கம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க இருவரும் திருமணம் செய்து பிரிந்து விடுகிறார்கள். இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும், பரஸ்பர ஈர்ப்பின் காரணமாக மீண்டும் இருவரும் ஒன்றிணைவதே கதை.
ஹோமோசெக்ஸூவலை உரக்கச்சொல்லும் ANG LEEயின் இந்தப் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள்.
இந்தப் படம் டொரண்டோ மற்றும் வெனிஸ் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் கோல்டன் லயன் பரிசையும் வென்றுள்ளது. சிறந்தபடம், சிறந்த இயக்குனர் உள்பட 8 ஆஸ்கார் விருதுகளுக்கு இப்படம்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தைவானை சேர்ந்த இயக்குனர் ANG LEE இயக்கிய 'க்ரோஞ்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்' படம் ( செள-யன்- பேட் நடித்தது) சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதை ஏற்கனவே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரை பட்டியலில் உள்ள 'CAPOTE' திரைப்படம் Bisexual writter Truman Capote-ஐ பற்றியது. Philip Seymour Hoffman நடித்துள்ள CAPOTE சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் உள்பட 5 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் திரைக்கதையை DAN FUTTERMAN எழுதியுள்ளார். இயக்கம் BENNET TMILLER. உள்ளூர் மற்றும் உலக அளவில் இதுவரை 25 விருதுகளை வென்றுள்ளது CAPOTE.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பல்வேறு கேரக்டர்களுக்குள் நடைபெறும் உறவு பரிமாற்றத்தை சொல்கிற படம் CRASH. இதன் கதை திரைக்கதை இயக்கம், PAUL HAGGIS.
'BROKE BACK MOUNTAIN' அளவுக்கு அமெரிக்காவில் விமர்சனத்தை கிளப்பியிருக்கும் இன்னொரு திரைப்படம் 'TRANSAMERICA.' ஆணாக இருக்கும் ஒருவர் பெண்ணாக மாறும் கதையினூடாக தற்கால வாழ்வியல் பிரச்சனை இதில் அலசப்பட்டுள்ளது. 'TRANSAMERICA' -வில் ஆண் பெண்ணா நடித்திருக்கும் Felicity hoffman சிறந்த நடிகைக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் 'MUNICH' திரைப்படமும், சிறந்த அயல்நாட்டு திரைப்பட பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 'PARADISE NOW' திரைப்படமும் யூதர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.
1972-ம் ஆண்டு MUNICH OLYMPIC- ல் இஸ்ரேலை சேர்ந்த பதினொரு விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு கொலையாளிகளை கண்டுபிடிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை பேசுகிறது ஸ்பீல்பெர்க்கின் 'MUNICH'. இது பல தகவல் பிழைகளுடன் இஸ்ரேலியரை தவறாக சித்தரிப்பதாக கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
பாலஸ்தீன இயக்குனர் HANY ABU-ASSAD இயக்கியிருக்கும் 'PARADISE NOW' படம் இரண்டு மனித வெடிகுண்டுகள் டெல் அவிவ் பேருந்தை தகர்க்க முயல்வதை சொல்கிறது. NABLUS-ஐ சேர்ந்தவர்களாக காட்டப்படும் இந்த மனித வெடிகுண்டுகளை பற்றிய படம் அப்பட்டமாக யூதர்களுக்கு எதிரானது என இஸ்ரேல் பத்திரிகைகளும் இணைய தளங்களும் கூறுகின்றன.
Jeroge Clooney இயக்கியிருக்கும் 'GOOD NIGHT, AND GOOD LUCK' திரைப்படமும் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உள்பட 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Clooney- ன் இப்படம் அரசியலை பற்றியது. முக்கியமாக அமெரிக்கன் ப்ராட்காஸ்ட் ஜர்னலிஸத்தின் ICON என சொல்லப்படும் Edword R. Murrow- ஐ பின்னணியாக கொண்டது.
இதைத்தவிர கிராபிக்ஸை நம்பி எடுக்கப்பட்ட 'ஹாரி பாட்டர்' , 'லார்டு ஆஃப் த ரிங்ஸ்' படத்தை இயக்கிய பீட்டர் ஜாக்ஸனின் 'கிங்காங்' என சில படங்களும் போட்டியில் உள்ளன. ஆனால், சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர்,நடிகை போன்ற முக்கியமான பிரிவுகளில் இவை இல்லை என்பது ஆறுதல்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இயற்கைக்கு மீறிய உறவுகளை சொல்லும் படங்கள் ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. அதுபோல, பிரமாண்டங்களுக்கும் இதில் இடம் இல்லை என்பது மற்றொரு வியப்பு. உதாரணமாக, சிறந்த படங்கள் பிரிவில் பரிந்துரைக்கபட்ட ஐந்துமே லோ-பட்ஜெட் படங்கள். அமெரிக்காவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டன. விதிவிலக்கு ஸ்பீல் பெர்க்கின் 'MUNICH.' இதன் மொத்த பட்ஜெட் 75 மில்லியன் டாலர்கள் (ஹாரிபாட்டர் போன்ற பிரமாண்டங்களுடன் ஒப்பிடுகையில் இதுவும் லோ-பட்ஜெட்டே!).
மற்ற நான்கு படங்களின் பட்ஜெட்:
BROKE BACK MOUNTAIN - 15மில்லியன் டாலர்கள்
GOOD NIGHT, AND GOOD LUCK - 7.5மில்லியன் டாலர்கள்
CAPOTE - 7மில்லியன் டாலர்கள்
CRASH - 6.5மில்லியன் டாலர்கள்
தொழில்நுட்பங்கள், கிராபிக்ஸ், பிரமாண்டங்கள் இவற்றை தவிர்த்து மனித உணர்வுகளின்பால் தனது கவனத்தை ஹாலிவுட் திருப்பியிருப்பதை நிரூபிக்கின்றது 2005-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் பரிந்துரை பட்டியல்!
தடுக்கி விழுவதற்குகூட ஹாலிவுட்டை கைகாட்டும் தமிழ்சினிமா, ஹாலிவுட்டின் இன்றைய மாற்றத்தை கணக்கில் கொள்வது அவசியம் என்பதுடன் அத்தியாவசியமானதும் கூட!
|
Feedback!
|
|