
Written by: JBR
பொங்கலையொட்டி ஏழு படங்கள் திரைக்கு வருகின்றன. வழக்கம் போல் இந்த எண்ணிக்கை கடைசிநேர மாறுதலுக்கு உள்பட்டது. சில படங்கள் பொங்கலுக்கு முன்பே அதாவது 12-ந் தேதியே திரைக்கு வருகின்றன. என்றாலும் நம் கணக்குப்படி அவையும் பொங்கல் படங்களே!
விஜய் நடிக்கும் 'போக்கிரி', அஜித்தின் 'ஆழ்வார்', அமீரின் 'பருத்தி வீரன்', ஹரியின் 'தாமிரபரணி', விஜய டி.ஆரின் 'வீராசாமி' கார்த்திக்கின் 'கலக்குற சந்துரு' மற்றும் மணிரத்னத்தின் 'குரு' ஆகிய ஏழு படங்களே பொங்கலையொட்டி ரிலீஸாகின்றன.
எப்போதும் போல் விஜய் அஜித் படங்களுக்கு எதிர்பார்ப்பு ஏறுமுகத்தில்! விஜய் நடிக்கும் 'போக்கிரி' தெலுங்கு ரீ-மேக். மகேஷ்பாபு நடித்த இந்தப் படத்தை அதே பெயரில் தமிழில் எடுத்திருக்கிறார்கள். இயக்கம் பிரபுதேவா. தமிழில் 'போக்கிரி' இவருக்கு இயக்குனராக முதல் படம். போலீஸ் அதிகாரி விஜய் மாஃபியா கூட்டத்தை பிடிக்க தானுமொரு மாஃபியாவாக நடிப்பது படத்தின் கதை. ஏரோபிக் இன்ஸ்ட்ரக்டராக வரும் அசின் படத்தின் காதல் ரசகுல்லா. பிரகாஷ்ராஜ் வில்லன். காமெடிக்கு வடிவேலு. கலக்கல் ரோலுக்கு நெப்போலியன், நாசர். பிரவுதேவா படம் என்பதால் பாடல் காட்சிகளில் எக்ஸ்ட்ரா எனர்ஜி செலவழித்திருக்கிறார் விஜய். இசை மணிசர்மா. மொத்தமுள்ள ஏழு பாடல்களில் ஒன்று ரீ-மிக்ஸாம். கபிலன் வரிகளில் 'ஆடுங்கடா என்னை சுத்தி, நான் அய்யனாரு வெட்டுக் கத்தி...' பாடல் எப்.எம்.களில் பட்டையை கிளப்புகிறது. கனகரத்னா மூவிஸ் சார்பில் ரமேஷ்பாபு படத்தை தயாரித்திருக்கிறார். ஒளிப்பதிவு நீரவ்ஷா. சண்டை பெப்ஸி விஜயன். நிச்சய வெற்றி கோஷத்துடன் பொங்கலை சந்திக்கிறான் 'போக்கிரி.'
விஜய் படத்துக்கு நேரடி போட்டி, அல்டிமேட்டின் 'ஆழ்வார்.' சைலண்டாக தயாரான யானை வெடி இது என்பது இன்டஸ்ட்ரி டாக். இயக்குனர் எஸ். ஷெல்லா. இவர் எஸ்.ஜே. சூரியாவின் அசிஸ்டெண்ட். மோகன் நடராஜனின் ஸ்ரீ ராஜகாளியம்மன் சூப்பர் பிலிம்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது. இசை ஸ்ரீகாந்த தேவா. பாடல்கள் வாலி. ஆடியோவை பொறுத்தவரை 'ஆழ்வார்' ஸ்லோ பிக்கப். மருத்துவமனை வார்டு பாய் அஜித் பத்திரிகை செய்திகளின் பின்னணியில் தவறு செய்பவர்களை தண்டிப்பது கதை. கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் வடமேற்கு பருவமழையாக அசின். பிணவறை காப்பாளனாக நடிக்கிறார் விவேக். படத்தில் மனோரமாவும் உண்டு. ஒளிப்பதிவு ரமேஷ் Gee. சண்டை சூப்பர் சுப்ராயன். 'வாலி' காலத்து பளபள தோற்றத்தில் இருக்கும் அஜித்தான் படத்தின் மிகப்பெரிய பிளஸ். படத்தின் மெயின் வில்லன் லால். இவரை தவிர வின்சென்ட் ஆசோகன், ஆர்யன் என இரண்டு பேர் இருக்கிறார்கள். ஆறு பந்தில் ஆறு சிக்சர் என்ற கணக்குடன் களம் இறங்குகிறது 'ஆழ்வார்!'
பிலிம் இல்லாமல் படமெடுத்தாலும் எடுப்பேனே தவிர அரிவாள் இல்லாமல் படமெடுக்கமாட்டேன் என சபதம் செய்திருக்கும் ஹரியின் படம் 'தாமிரபரணி.' இரு குடும்பங்களின் கதைதான் இந்த பரணி என்றாலும் படத்தில் ரத்தகளரிதான் அதிகம் என்கிறார்கள். விஷாலின் ஆறடி ஐயனார் உருவத்தை நூறுசதம் பயன்படுத்தியிருக்கிறேன் என ஹரி கூறும்போதே மூக்கருகில் ரத்த வாடை அடிக்கிறது.'ஐயா' வில் நயன்தாராவை அறிமுகப்படுத்திய ஹரி அதே சாயலில் பானு எனும் புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பிரபு, நதியா இருவருக்கும் வெயிட்டான வேடங்களாம். ஹரியின் பேவரிட் ஒளிப்பதிவாளர் ப்ரியனே இந்தப் படத்துக்கும் கேமரா. சண்டை ராக்கி ராஜேஷ். எடிட்டிங் V.T. விஜயன். நா. முத்துக்குமார் வரியில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் இப்போதே ஹிட். ஜி. வெங்கட்ராம ரெட்டியின் விஜயா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பு.
ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக மிரட்டும் இன்னொரு படம் அமீரின் 'பருத்தி வீரன்.' மதுரை பகுதியில் வாழ்ந்து மறைந்த ஒருவரின் நிஜக்கதையை பின்னணியாக கொண்டது. பருத்தி எனும் முரட்டு இளைஞனாக சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி. இவரை காதலிக்கும் அழகு மயிலாக ப்ரியாமணி. அமீரின் ப்ரிய ஒளிப்பதிவாளர் ராம்ஜி கேமரா. யுவன் ஷங்கர் ராஜா இசை. பாடல்கள் சினேகன். மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படம் பிடித்திருக்கிறார்கள். 'ராம்' படத்தை இயக்கிய அமீரின் படம் என்பதே 'பருத்தி வீரனின்' மிகப்பெரிய ப்ளஸ். ராஜசேகர் சண்டைக்காட்சி அமைத்திருக்கும் இந்தப் படத்தை அமீர் தனது சொந்த பட நிறுவனமான டீம் ஒர்க் புரொடக்ஷ்ன் ஹவுஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். பொங்கலுக்கு வெளிவரும் பக்கா கிராமத்து பொங்கல் 'பருத்தி வீரன்!'
அஜித், விஜய்க்கே நான்தாண்டா போட்டி என்னை எதிர்த்தா அவிழ்ந்திடும் வேட்டி என வரிந்து கட்டி டி.ஆர். களமிறக்கும் படம் 'வீராசாமி.' அடிதடி வக்கீலாக காதலுக்கு வக்காலத்து வாங்கும் கேரக்டரில் டி.ஆர். இவருக்கு ஜோடி மும்தாஜ். பெரிய செட் அமைத்து மும்தாஜுக்கு பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார். படத்தில் புதுமுகம் அஜீஸ், மேக்னா நாயுடு இன்னோரு ஜோடி. வழக்கம் போல கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, இயக்கம், போஸ்டர் ஒட்டுதல் அனைத்தும் டி.ஆரே!
திருவிழா கூட்டதில் வழி தவறிய குழந்தையாக ஒரு படம், 'கலக்குற சந்துரு.' கார்த்திக் நடித்து வெளிவராமல் பூசணம் பிடித்து கிடக்கும் அரைடஜன் படங்களில் இதுவும் ஒன்று. கார்த்திக்குடன் பாண்டியராஜனும் நடித்திருக்கிறார். நாயகி அனு. இயக்கம் ரவிராஜா. அனில் ஏ. சேவியர், பிரதீப் ரவி என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஸ்ரீ அஷ்டலட்சுமி பிலிம்ஸ் பி. சம்பூர்ணம் தயாரிப்பு!
இந்த ஆறு படங்களை விட அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது மணிரத்னத்தின் 'குரு'. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் 12-ந் தேதி ரிலீஸாகும் இப்படம் நேரடி தமிழ் படம் அல்ல. இந்தியிலிருந்து டப் செய்யப்பட்டது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் படத்தை தயாரித்துள்ளது. குஜராத்தின் சிறுகிராமம் ஒன்றில் பிறந்தவர் Guru Kant Desai. இந்தியாவை புரமைக்க வேண்டும் என கனவு காணும் குரு எப்படி படிப்படியாக முன்னேறி இந்தியாவின் மிகப்பெரிய இன்டஸ்ட்ரியலிஸ்டாக வளர்கிறார் என்பதை பல்வேறு காலகட்டங்களுடன் சொல்லியிருக்கிறார் மணிரத்னம். குருவாக அபிஷேக்பச்சனும் அவர் மனைவி சுஜாதாவாக ஐஸ்வர்யாராயும் நடித்துள்ளனர். மிதுன் சக்ரவர்த்தி பத்திரிகை எடிட்டராகவும் அவர்கீழ் பணிபுரியும் பத்திரிகை நிருபராக மாதவனும் நடித்துள்ளனர். மாதவனின் மனைவியாக வித்யா பாலன். ராஜீவ்மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை ஏ.ஆர். ரஹ்மான். அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் வைரமுத்து. ஐம்பதுகளில் உள்ள மும்பையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்களாம். திருபாய் அம்பானியின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டது என்றும் இல்லையில்லை அவரது மூத்த மகன் முகேஷ் அம்பானியின் வாழ்க்கையை விமர்சிக்கும் படம் என இருவேறு கருத்துக்கள் நிலவுவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது 'குரு.' தமிழ்நாடுக்கு வெளியே, இந்தியாவுக்கு வெளியே சர்வதேச அளவில் பேசப்படும படம் என்பதால் இந்த வருடத்தின் சர்வதேச பொங்கல் என்று 'குரு' வை சொல்லலாம்!
|
Feedback!
|
|