Home |  Videos |  Gallery |  News |  Reviews & Previews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
  -28.05.2007
   Home  | Interviews  | Gallery Click here for New Movie pics!




   Written by:  JBR



' We shall not cease from exploration and the end of all our exploring will be to arrive where we started and know the place for the first time.' - T.S. Eliot

ஜெர்மனை சேர்ந்த டாம் டைக்வர் (Tom Tykwer) தனது 33-வது வயதில் இயக்கிய படம் 'ரன் லோலா ரன்.' 1998 டொரான்டோ திரைப்படவிழாவில் அனைத்து பார்வையாளர்களின் அபிமானத்தை இப்படம் வென்றது. எதிர்கால சினிமாவுக்கான தொடக்கம் என 'ரன் லோலா ரன்' விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

வாழ்க்கை சந்தர்ப்பங்களால் ஆனது. சில சந்தர்ப்பங்களை நாம் உருவாக்குகிறோம். பெரும்பாலான நேரம் நாம் சந்தர்ப்பங்களின் கைப்பாவையாகிறோம். எதுவாக இருந்தாலும் கடந்துபோன சந்தர்ப்பங்களை நம்மால் ஒருபோதும் மாற்றியமைக்க முடிந்ததில்லை. வீடியோ கேம் விளையாட்டில் நாம் தவறிழைத்தால் ஆட்டத்தை மீண்டும் முதல் புள்ளியிலிருந்து தொடங்க முடியும். வாழ்க்கையில் இது சாத்தியமில்லை. ரீவைண்ட் என்பதே இல்லாதது வாழ்க்கை. ஒருவேளை அப்படி இருந்தால்...

வீட்டிலிருக்கும் லோலாவுக்கு போன் வருகிறது. எதிர்முனையில் அவளது காதலன் மானி. உள்ளூர் தாதா ஒருவனிடம் மானி வேலை செய்கிறான். தாதா கொடுக்கும் பொருளை குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைத்து மானி 1 லட்சம் மார்க்குகள் வாங்கி வரவேண்டும். அவனை லோலா தனது பைக்கில் பிக்கப் செய்து கொள்வதாக ஏற்பாடு. கடைக்கு செல்லும் லோலாவின் பைக்கை ஒருவன் திருடி விடுவதால் அது முடியாமல் போகிறது. மானி மெட்ரோ ரயிலில் ஏறுகிறான். அப்போது அங்கு வரும் போலீஸாரை கண்டு பதட்டமடையும் மானி, பணப்பையை ரயிலில் வைத்துவிட்டு கீழே இறங்கி போக்குகாட்டுகிறான். மீண்டும் அவன் ரயிலில் ஏறும் முன் பணப்பையுடன் ரயில் நகர்ந்து விடுகிறது. ரயிலில் பயணம் செய்யும் பிச்சைக்காரனொருவனிடம் மாட்டிக் கொள்கிறது பணம் இருக்கும் பை.



முச்சந்தில் இருக்கும் தொலைபேசியிலிருந்து மானி லோலாவிடம் பேசுகிறான். பனிரெண்டு மணிக்குள் 1 லட்சம் மார்க்குகளை தாதாவிடம் ஒப்படைக்காவிட்டால் மானி கொல்லப்படுவான். லோலா கடிகாரத்தை பார்க்கிறாள். மணி பதினொன்று நாற்பது. இன்னும் இருபதே நிமிடங்கள். தேவை ஒரு லட்சம் மார்க்குகள். மானி இருப்பது நகரின் வேறொரு இடம். டெலிபோனை எறிந்துவிட்டு ஓடத் தொடங்குகிறாள் லோலா.

லோலா முதலில் தனது தந்தையின் அலுவலகத்திற்கு செல்கிறாள். அவரிடம் ஒரு லட்சம் மார்க்குகள் உடனடியாக தேவை என்கிறாள். தனது காதலியுடன் பேசிக் கொண்டிருக்கும் லோலாவின் தந்தையோ, நீ என் மகளே இல்லை என லோலாவை துரத்தியடிக்கிறார். அழுது கொண்டே லோலா மானி இருக்கும் இடத்திற்கு வரும்போது நேரம் கடந்து விடுகிறது. மானி அருகிலிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கிறான். லோலா அவனுக்கு உதவுகிறாள். கொள்ளை பணத்துடன் தப்பிக்கையில் போலீஸ் இருவரையும் சுற்றி வளைக்கிறது. தனது கையிலிருக்கும் பணத்தை போலீஸை நோக்கி தூக்கி எறிகிறாள் லோலா. இந்த திடீர் செய்கையால் அதிர்ச்சியடையும் போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கி வெடிக்கிறது. மார்பில் குண்டுடன் தரையில் சாய்கிறாள் லோலா.

காட்சி டிஸ்ஸால்வ் ஆக மீண்டும் தொலைபேசி ஒலிக்கிறது. மீண்டும் ஓடத் தொடங்குகிறாள் லோலா. அதே இடம், அதே தெரு, அதே ஜனங்கள்! லோலா நேராக தனது தந்தையின் அலுவலகத்திற்கு செல்கிறாள். அவர் பணம் தர மறுக்க, துப்பாக்கி முனையில் அவரை சிறை வைத்து ஒரு லட்சம் மார்க்குகளை அவரது அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்கிறாள் லோலா. பணத்துடன் மானியின் இடத்திற்கு வருகிறாள். மானி துப்பாக்கியுடன் கடையை கொள்ளையடிக்க கிளம்புகையில் லோலாவின் குரலை கேட்கிறான். அவளை நோக்கி வரும்போது, எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் ஒன்றில் அடிபட்டு சாலையில் விழுகிறான்.

இப்போது மீண்டும் லோலா ஓடத் தொடங்குகிறாள். இந்த முறை தனது கையிலிருக்கும் சொற்ப பணத்தை வைத்து கேசினோ ஒன்றில் சூதாடுகிறாள். அவளுக்கு தேவையான பணம் கிடைக்கிறது. இதனிடையில் மானி ரயிலில் தனது பையை எடுத்துக் கொண்ட பிச்சைக்காரனை தெருவில் பார்க்கிறான். அவனை துரத்திச் சென்று பணத்தை கைப்பற்றுகிறான். லோலா பணத்துடன் மானி இருந்த இடத்துக்கு வருகிறாள். அப்போது தாதாவிடம் பணத்தை ஒப்படைத்து விட்டு காரிலிருந்து மானி இறங்குகிறான். மானி, லோலா இருவரும் கைகோர்த்தபடி மகிழ்ச்சியுடன் நடக்க படம் முடிவடைகிறது.

ஒரு நிகழ்வு, மூன்று சாத்தியங்கள்! படத்தின் தொடக்கத்தில் வரும் மானி, லோலா உரையாடலின்போது கறுப்பு வெள்ளையில் மானி பணத்தை தவறவிடும் நிகழ்வு இடையிடையே காட்டப்படுகிறது. இந்தப் பகுதி 20 நிமிடங்கள் படத்தில் வருகிறது. லோலா பணத்தை ஏற்பாடு செய்ய இருக்கும் அவகாசம் 20 நிமிடங்கள். லோலா ஓடத் தொடங்குவதிலிருந்து மானியை சந்திக்கும் வரையிலான காட்சிகளும் படத்தில் இருபது நிமிடங்கள் வருகின்றன. அதாவது கதையின் கால அளவே காட்சிகளும் வருகின்றன. லோலா மூன்று முறை ஓடுகிறாள். ஆக, 3x20 அறுபது நிமிடங்கள்.

டாம் டைக்வர் கதையை சொல்ல ஸ்லோமோஷன், பாஸ்ட்மோஷன், வீடியோ கேமரா, ஸ்டிஸ், கார்ட்டூன் என அனைத்தையும் பயன்படுத்தியுள்ளார். லோலா தனது ப்ளாட்டிலிருந்து படிக்கட்டு வழி இறங்கி வருவதை கார்ட்டூனாக காட்டுகிறார் இயக்குனர். தெருவில் குழந்தையுடன் செல்லும் பெண்மணியை இடிக்கிறாள் லோலா. இப்போது அப்பெண்ணின் முகம் திரையில் உறைய, பத்துக்கும் குறைவான விநாடிகளில் 24 போட்டோஷாட்களில் அப்பெண்ணின் கதை சொல்லப்படுகிறது. ஒவ்வொரு முறை லோலா அப்பெண்ணை கடந்து செல்லும்போதும் அப்பெண்ணின் கதையும் மாறுகிறது. இந்த உத்தியில் லோலா ஓடும்போது எதிர்படும் பலரின் கதையை ஊடுஇழையாக காட்டிச் செல்கிறார் இயக்குனர்.

படத்தின் பரவசமான விஷயம் இசை. கடிகார ஒலியை நினைவுப்படுத்தும் டெக்னோ இசை படம் நெடுகிலும் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது.

இன்றைய நவீன யுகத்தில் நிலையாமையே எங்கும் நிரம்பியுள்ளது. சுனாமியில் ஒரே நொடியில் நம் உயிர் பறிக்கப்படலாம். ஒரு ரயில் விபத்து நம்மை இல்லாமல் செய்யலாம். ஒவ்வொரு நிகழ்விலும் வாழ்வும் மரணமும் சரிவிகிதத்தில் மறைந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக எதை தேர்வு செய்வது என்ற உரிமை நம்மிடம் இல்லை.




டாம் டைக்வரின் 'ரன் லோலா ரன்' நவீன யுகத்தின் இந்த புதிரை ரசனையுடன் எதிர்கொள்கிறது. படத்தில் பணப்பையை போலீஸிடம் தூக்கியெறியும் போது சுடப்பட்டு இறக்கிறாள் லோலா. அதே நேரம் இரண்டாவது பகுதியில் அப்பாவை துப்பாக்கி முனையில் மிரட்டி லோலா பணத்துடன் வெளியே வரும்போதும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. கையில் பணப்பை இருந்தும், லோலா அந்த அலுவலகத்திற்கு வந்த யாரோ ஒருவர் என நினைத்து போலீஸ் லோலாவை பத்திரமாக அப்புறப்படுத்துகிறது. மரணத்துக்கும், வாழ்வுக்குமான சாத்தியம் எத்தனை அபத்தமான முறையில் நவீன யுகத்தில் மாற்றப்பட்டுள்ளது என்பதற்கு இந்த காட்சி ஓர் உதாரணம்.

இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த டி.எஸ். இலியட்டின் மேற்கோள் 'ரன் லோலா ரன்' படத்தின் தொடக்கத்தில் திரையில் காட்டப்படுவது. அத்துடன் எஸ். ஹெர்பெர்கரின் மேற்கோள் ஒன்றும் படத்தில் வருகிறது.

'After the game is before the game'

Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hot Pictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us