Written by: JBR
ஹாலிவுட் மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்த கோடையை அவர்கள் பிரமாதமாக தொடங்கியிருக்கிறார்கள். கோடையின் முதல் பிரமாண்ட ரிலீஸான 'ஸ்பைடர்-மேன் 3' முந்தைய வசூல் ரெக்கார்டுகளை முறியடித்துள்ளது. இந்த சாதனையை அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் 105 நாடுகளில் 'ஸ்பைடர்-மேன் 3' செய்துள்ளதுதான் இந்த கோடையின் அதிசயம்.
'ஸ்பைடர்-மேன் 2' -ல் ஸ்பைடியாக (பீட்டர் பார்க்கர்) நடித்த டோபி மேகியூர்தான் இதிலும் ஹீரோ. வழக்கம்போல ஸ்பைடர்மேனாகிய பீட்டர் பார்க்கர் தனது காதலி மேரி ஜேனிடம் காதலை சொல்ல தயங்குகிறான். திருமண மோதிரத்தை மேரி ஜேனிடம் பீட்டர் பார்க்கரால் தர இயலாமல் போகிறது.
பீட்டரின் நண்பன் ஹாரி ஆப்சர்ன், தனது தந்தையை கொன்றது பீட்டர்தான் என அவனை பழிவாங்க துடிக்கிறான். இருவருக்கும் நடக்கும் சண்டையில் ஹாரியின் நினைவாற்றல் அழிந்துபோக பீட்டரும் ஹாரியும் மீண்டும் நண்பர்களாகின்றனர்.
இடையில் விண்வெளியிலிருந்து வரும் ஜந்து பீட்டரின் அதாவது ஸ்பைடர்மேனின் உடம்பில் புகுந்து கொள்கிறது. ஸ்பைடர்மேனின் சிவப்பு நிற உடை, அந்த ஜந்துவின் கறுப்பு நிறத்துக்கு மாறுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் கடுமையான மனிதனாக ஸ்பைடர்மேனை அந்த ஜந்து மாற்றுகிறது.
படத்தின் பிரதான வில்லன் சேன்ட்மேன். ஸ்பைடர் மேனின் மாமாவை கொன்ற இவன் ஜெயிலிலிருந்து தப்பித்து மகளை பார்க்க வரும்போது எதிர்பாராத விபத்தில் மணல் மனிதனாக மாறுகிறான். மகளின் மருத்துவ செலவுக்காக வங்கிகளை கொள்ளையடிக்கிறான் சேன்ட்மேன்.
போட்டோகிராபராக இருக்கும் பீட்டர் பார்க்கருக்கு வில்லனாக வந்து சேர்கிறான் எடி ப்ராக் எனும் புதிய புகைப்பட கலைஞன். பீட்டர் பார்க்கரால் எடியின் வேலை பறிபோகிறது.
பீட்டரை பழிவாங்க துடிக்கும் எடி, பீட்டர்தான் ஸ்பைடர்-மேன் என்பதை தெரிந்து கொள்கிறான். ஸ்பைடர்மேனின் உடம்பிலிருக்கும் வேற்றுகிரக ஜந்து எடியின் உடம்பில் புக எடி வெனாம் என்ற ஸ்பைடர்-மேன் சாயலில் உள்ள தீய சக்தியாக மாறுகிறான்.
இறுதிகாட்சியில் சேன்ட்மேனும் வெனாமாக மாறிய எடியும் மேரி ஜேனை சிறைபிடிக்க, ஸ்பைடர்மேனும் ஹாரியும் சேர்ந்து அவளை காப்பாற்றுகிறார்கள். இந்த போராட்டத்தில் நண்பனை காப்பாற்ற ஹாரி உயிர் தியாகம் செய்கிறான்.
கிராபிக்ஸ் வித்தைகளை ஓரமாக ஒதுக்கி விட்டுப் பார்ர்த்தால் சிலந்தி மனிதன் 3 வெறும் சாதாரண மனிதன். ஸ்பைடர்-மேன் தனது தந்தையை கொன்றதாக கொலை வெறியில் இருக்கும் ஹாரியிடம் க்ளைமாக்ஸின்போது, உன் தந்தை ஸ்பைடர்மேனால் சாகவில்லை என சாவகாசமாக உண்மையை சொல்கிறார் ஹாரியின் உதவியாளர். ஹாரியுடன் இருக்கும் அவர் இந்த உண்மையை முன்பே சொல்லியிருந்தால் ஸ்பைடர்-மேன் முதல் பாகத்திலிருந்து தொடர்ந்து வரும் பீட்டர், ஹாரி பைட் அப்போதே முடிவுக்கு வந்திருக்கும்.
காதலியை வெறுப்பேற்ற பீட்டர் பார்க்கர் பாரில் நடனமாடும்போது நமக்கு தமிழ் சினிமா ஹீரோக்கள் நினைவில் வந்து போகிறார்கள். நியூயார்க் சிட்டியின் அனைத்து வங்கிகளையும் சேன்ட்மேன் கொள்ளையடிக்கும் அளவுக்கு அவன் மகளுக்கு என்ன வியாதி? அந்த வேற்றுக்கிரக ஜந்து எப்படி சரியாக ஸ்பைடர்மேனை வந்தடைந்தது? ஞாபக மறதியால் பாதிக்கப்பட்ட ஹாரி திடீரென்று மீண்டும் நினைவாற்றல் பெற்று ஸ்பைடர்மேனுடன் மோதியது எங்ஙனம்?
இதுபோல் ஒருடஜன் கேள்விகளுக்கான ஓட்டைகள் 'ஸ்பைடர்-மேன் 3' யில் உண்டு. ஆனால், அது விஷயமல்ல. ஸ்பைடர்மேனின் வசூல், அதுதான் ஆச்சரியம்.
அமெரிக்காவில் இப்படம் 4,252 தியேட்டர்களில் வெளியானது. ஒரு ஹாலிவுட் படம் இத்தனை அதிகம் தியேட்டர்களில் வெளியானது இதுவே முதல் முறை.
'ஸ்பைடர்-மேன் 3' வெளியான அன்று அமெரிக்காவில் மட்டும் 4,252 தியேட்டர்களில் இதன் மொத்த வசூல் 59 மில்லியன் டாலர்கள். (சரியாக சொன்னால் 58,166,256 டாலர்கள்). இதுவொரு சாதனை. சென்ற வருடம் ரிலீஸான 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், டெட் மேன்ஸ் செஸ்ட்' திரைப்படமே இதுவரை முதல்நாள் வசூலில் முன்னணியில் இருந்தது. அப்படத்தின் முதல் நாள் வசூல் 55.8 மில்லியன் டாலர்களை 'ஸ்பைடைர் மேன் 3'-யின் 59 மில்லியன் டாலர்கள் முறியடித்துள்ளது.
அதேபோல் முதல்வார வசூலில் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், டெட் மேன்ஸ் செஸ்ட்'டின் 135.6 மில்லியன் டாலர்களை 'ஸ்பைடர்-மேன் 3'யின் 152 மில்லியன் டாலர்கள் முறியடித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வெளியே கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, பிரெசில், ரஷ்யா என பல்வேறு நாடுகளில் இப்படம் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தியாவில் 'ஸ்பைடர்-மேன் 3'-க்கு 588 பிரிண்டுகள் போடப்பட்டிருப்பது ஒரு சாதனை. இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், போஜ்புரி உள்ளிட்ட 5 மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்நாள் வசூல் இந்தியாவில் 6.64 கோடிகள். முதல்வார வசூல் பத்தொன்பது கோடியே பதினேழு லட்சம்.
இது ஜேம்ஸ்பாண்ட் படமான 'கேசினோ ராயலை' விட (14.94 கோடி) அதிகம்.
இந்த வருடம் வெளியான படங்களில் மணிரத்னத்தின் 'குரு' முதல்வார இறுதியில் 20 கோடியே 70 லட்சம் வசூலித்து முன்னிலையில் உளளது. ஆனால் 'குரு'வின் இரண்டாம், மூன்றாம் வார வசூல் மிகக் குறைவு. இதனால் மொத்த வசூலில் 'ஸ்பைடர்-மேன் 3', 'குரு' வை முந்துவதற்கு வாய்ப்பு அதிகம்.
இப்போதைய அனைவரின் எதிர்பார்ப்பு, மொத்த வசூலில் உலகின் முதலிடத்தை 'ஸ்பைடர்-மேன் 3' பிடிக்குமா?
அமெரிக்காவில் மொத்த வசூலில் முதலிடத்தை தொடர்ந்து 'டைட்டானிக்' தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இப்படத்தின் அமெரிக்க வசூல் மட்டும் 600,779,824 டாலர்கள்.
ஏழாவது இடத்தில் 'ஸ்பைடர்-மேன் 1' உள்ளது. இதன் மொத்த வசூல் 403,706,375 டாலர்கள். 'ஸ்பைடர்-மேன் 2' பத்தாவது இடத்தில் உள்ளது. இதன் மொத்த கலெக்ஷ்ன் 373,377,893 டாலர்கள்.
உலக அளவிலும் வசூலில் 'டைட்டானிக்' படமே முதலிடத்தில் (1,835,300,000 டாலர்கள்) உள்ளது. இரண்டாமிடம் ஜார்ஜ் லூகாஸின் ஸ்டார் வார்ஸ் படத்துக்கு. 'ஸ்பைடர்-மேன் 1' பதினைந்தாவது இடத்தில் (806,700,000 டாலர்கள்)உள்ளது. 'ஸ்பைடர்-மேன் 2'க்கு பதினெட்டாவது இடம்.
உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஸ்பைடர்-மேன் 3' முதலிடத்தை பிடிக்குமா? கடினம் என்பதே நிபுணர்களின் கருத்து. மேலும் ஒருநாள் மேட்சில் நானூறுக்கு மேல் ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் சாதனையை அடுத்த நான்கு மணிநேரத்தில் தென்னாப்பிரிக்கா முறியடித்தது போன்றதொரு நிலை 'ஸ்பைடர்-மேன் 3'க்கும் ஏற்படலாம்.
சென்ற வருடம் வெளியான 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், டெட் மேன்ஸ் செஸ்ட்' திரைப்படம் அமெரிக்காவிலும் சரி உலக அளவிலும் சரி, ஸ்பைடர்-மேன் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைவிட அதிகம் வசூலித்துள்ளது. அமெரிக்க அளவில் ஸ்பைடர்-மேன் முதல் பாகம் வசூலில் ஏழாமிடத்தில் உள்ளது. ஆனால் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், டெட் மேன்ஸ் செஸ்ட்' 423,032,628 டாலர்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
உலக அளவில் ஸ்பைடர்மேனின் முதல்பாகம் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. ஆனால் 'பைரேட்ஸ்...' 1,129,219,252 டாலர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளது.
இந்த வசூலை 'ஸ்பைடர்-மேன் 3' முறியடித்தாலும் கூட இந்த கோடையில் (ஜுன் 15) பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் சீரிஸின் மூன்றாம் பாகம் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்; அட் வேர்ட்ஸ் என்ட்' வெளியாக உள்ளது. தமிழில் இப்படம் 'கரிபியன் கல்லறைத் தீவு; உலகத்தின் எல்லையில்' என்ற பெயரில் வெளியாகிறது. இது 'ஸ்பைடர்-மேன் 3' யின் அசுர வசூலை அசராமல் முறியடிக்கும் என சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். அதற்கான வேலைகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளனர் இப்படத்தின் தயாரிப்பாளர்களான டிஸ்னி நிறுவனத்தார். மேலும், 'ஹாரிபாட்டர் -5', 'ரஷ் ஹவர் -3', 'டை ஹார்ட்', 'ஷ்ரிக் -2' படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இதனால் 'ஸ்பைடர்-மேன் 3' யின் சாதனை விரைவில்... மிக விரைவில் முறியடிக்கப்படலாம்.
|
Feedback!
|
|