
Written by: JBR
கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து வந்த தொய்வுநிலை நீங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த வருடம் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை அதிகம். கூடவே தமிழ் சினிமா ஈட்டியிருக்கும் லாபமும் அதிகம். சினிமா ஒரு லாபகரமான தொழில் என்பதை நிரூபித்திருக்கின்றன 2006-ல் வெளியான படங்கள்.
சென்ற ஆண்டு, அதாவது 2005-ல் வெற்றிக் கோட்டை எட்டுப்படங்கள் மட்டுமே எட்டிப் பிடித்தன. இந்த எட்டில் இரண்டு படங்கள் மெகா ஹிட். அவை 'சந்திரமுகி' மற்றும் 'அந்நியன்'. ஹிட் ரகத்தை சேர்ந்தவை முருகதாஸின் 'கஜினி', பேரரசுவின் 'சிவகாசி' மற்றும் லிங்குசாமியின் 'சண்டக்கோழி.' இந்த ஆண்டு வெற்றி விகிதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் பட்ஜெட் படங்களின் காலம் என்று சொல்லலாம். இந்த ஆறு மாத காலத்தில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை நாற்பத்தியிரண்டு. இதில் லாபம் சம்பாதித்துக் கொடுத்தவை ஏழு படங்கள். 'டிஷ்யூம்', 'சித்திரம் பேசுதடி', 'தலைநகரம்', 'திருட்டு பயலே', 'கள்வனின் காதலி', 'கொக்கி', 'பாரிஜாதம்' என அந்த ஏழு திரைப்படங்களும் சிறு முதலீட்டில் எடுத்தவை. மூன்றிலிருந்து மூன்றரை கோடியை தாண்டாதவை. வழக்கமான கதைகளிலிருந்து மாறுபட்டு, யதார்த்தமாக கதை சொன்ன விதமே இப்படங்கள் வெற்றிபெற காரணமாக அமைந்தது. அரசின் திருட்டு வி.சி.டி. ஒழிப்பு இன்னொரு காரணம். இந்தப் படங்களின் மூலம் சுமார் முப்பது கோடி ரூபாய் அளவுக்கு தமிழ் சினிமா லாபம் ஈட்டியது.
இதனைத் தொடர்ந்து வந்த அடுத்த ஆறுமாத காலம் மெகா பட்ஜெட் படங்களின் திருவிழா. செவன்த் சேனல் தயாரிப்பில் கௌதம் இயக்க கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த 'வேட்டையாடு விளையாடு', ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான 'இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி', தருண் கோபி இயக்கத்தில் வெற்றி பெற்ற 'திமிரு', தெலுங்கு ரீமேக்கான 'உனக்கும் எனக்கும்', சத்யஜோதி பிலிம்ஸின் 'எம் மகன்' ஆகிய படங்கள் நல்ல லாபத்தை சம்பாதித்தன.
'எம் மகன்' ஐந்து கோடியும், 'திமிரு' எட்டு கோடியும், 'இம்சை அரசன்', 'உனக்கும் எனக்கும்' தலா பத்து கோடியும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தன. அதிகபட்சமாக 'வேட்டையாடு விளையாடு' பதினைந்து கோடி சம்பாதித்துக் கொடுத்தது.
இவை ஐந்தும் தீபாவளிக்கு முன் வெளியானவை. தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் 'வரலாறு', 'ஈ' மற்றும் 'வல்லவன்' திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
அஜித் அவ்வளவுதான் என்று சொன்னவர்களின் வாயை அடைக்கும்படி நீண்டநாள் பெட்டியிலிருந்த 'வரலாறு' தீபாவளிக்கு வெளியாகி பெருவெற்றி பெற்றது. இந்தப் படம் மட்டும் 13 கோடி அளவுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. வித்தியாசமான கதைக்களம், மாறுபட்ட நடிப்புடன் ஜனநாதன் இயக்கிய 'ஈ' ஆறுகோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. மிகுந்த பொருட்செலவில் சிம்பு இயக்கிய 'வல்லவன்' படமும் வெற்றி பெற்றது. இதன் மொத்த வருமானம் எட்டு கோடிகள்!
இந்த ஆண்டின் பிற்பகுதி ஆறு மாதங்கள் சிறு முதலீட்டுப் படங்களுக்கு சாதகமாக அமையவில்லை. 'மண்', 'ஆவணித் திங்கள்', 'நெஞ்சில்' உள்பட எந்த சிறு முதலீட்டுப் படமும் லாபம் பார்க்கவில்லை. விதிவிலக்கு 'பிரதி ஞாயிறு'. இந்தப் படம் மட்டும் தயாரிப்பாளருக்கு சில லட்சங்கள் சம்பாதித்துக் கொடுத்தது.
மாதவன் இரண்டு வேடங்களில் நடிக்க, குஷ்பு தயாரிப்பில் சுந்தர் சி. இயக்கிய 'இரண்டு' படம் ஐந்து கோடிகள் வரை லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ் பிக்சர்ஸின் மற்றுமொரு படைப்பான வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' பரவலான வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவும் வெற்றிப் பட வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் சுமாரான லாபம் ஈட்டியவை சீமானின் 'தம்பி' மற்றும் அஜித்தின் 'பரமசிவன்', 'திருப்பதி' படங்கள். எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய 'நெஞ்சிருக்கும் வரை', தனுஷின் 'திருவிளையாடல் ஆரம்பம்' சிறு முதலீட்டுப் படங்களான 'திருடி', 'காதலும் கற்று மற' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் எவை வெற்றிக்கோட்டை எட்டும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
இவை தவிர டிசம்பர் 22-ந் தேதி எட்டு படங்கள் திரைக்கு வருகின்றன. கே. பாலசந்தரின் 'பொய்', பிரஷாந்தின் 'தகப்பன் சாமி' மற்றும் பட்ஜெட் படங்களான 'மழைத்துளி மழைத்துளி', 'அழகிய அசுரா', 'ஆடு புலி ஆட்டம்', 'ஆட்டம்' உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இவற்றில் சில படங்களாவது வெற்றி பெறும் என்பது உறுதி.
டிசம்பர் மாதத்தை தவிர்த்து இதுவரை வெளியான படங்கள் மட்டும் நூற்றியிருபது கோடி அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளன. தரமான கதை, காட்சியமைப்பு, அரசின் தமிழ் தலைப்புக்கு முழு வரிவிலக்கு ஆகியவையே இந்த வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
மேலும், தனிநபர் ஒருவரையும் இந்த வெற்றிக்கு காரணமாக கூறலாம். அவர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இந்த வருடம் இவர் தயாரிப்பில் வெளியான ஒரே படம் 'டிஷ்யூம்.' அதே நேரம் இவர் தயவால் வெளியான படங்கள் பல. 'சித்திரம் பேசுதடி' வெளியாகி ஒரு வாரத்தில் அதன் கடனை தாங்க முடியாமல் தயாரிப்பாளர் தத்தளித்தபோது படத்தை வாங்கி தமிழ்நாடு முழுவதும் விநியோகித்தார் ரவிச்சந்திரன். முறையான விளம்பரங்கள் மூலம் படத்தையும் வெற்றி பெற வைத்தார். இதேபோல் 'பாரிஜாதம்', 'தலைநகரம்', 'இரண்டு' ஆகிய படங்களை வாங்கி அதன் தயாரிப்பாளர்களை கடனிலிருந்து காப்பாற்றியதுடன் படங்களையும் வெற்றி பெறச்செய்தார். டிச. 22 வெளியாகயிருக்கும் 'பொய்'யும்கூட இவர் தயவில்தான் ரிலீஸாக இருக்கிறது.
இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியென்றால் அது, கஸ்தூரிராஜாவின் 'இது காதல் வரும் பருவம்' படத்தின் மிகப் பெரிய தோல்வி! சதையை வைத்து தமிழ் ரசிகர்களை ஏமாற்றலாம் என்ற கஸ்தூரிராஜா போன்ற சதை வியாபாரிகளுக்கு 'இது காதல் வரும் பருவம்' மூலம் பாடம் நடத்தியிருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். ரசிகர்களின் ரசனை உயர்ந்திருப்பதற்கும் தமிழ் சினிமா தரத்தில் சிறந்து வருவதற்கும் இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன!
|
Feedback!
|
|