
Written by: JBR
சினிமா உள்பட அனைத்து கலைகளும் சமூகத்தின் வெளிப்பாடுகளே. அதிலும் தமிழ் சமூகம் அரசியலிலும் சினிமாவை அளவுகோலாக்கி பார்க்கும் மரபு கொண்டது. சினிமாசார்ந்த ஐந்து முதல்வர்களை நாம் உற்பத்தி செய்திருப்பது இதற்கு சான்று.
திரைப்படங்கள் அவை திரையிட துவங்கிய நாளிலிருந்து தமிழர்களை பாதித்து வருகின்றன. அவற்றின் வெற்றியும் தோல்வியும்கூட பாதிக்கின்றன. தமிழ்திரைப்படங்களின் எண்ணிக்கையை..... அதன் வியாபாரத்தை கணக்கில் கொண்டு தமிழர்களின் ரசனையை பொருளாதார நிலையை ஓரளவு கணிக்கமுடியும்.
அந்தவகையில் 2005 அதற்கு முந்தைய ஆண்டைவிட சிறப்பானது. 2005-ல் தயாரிக்கப்பட்ட நேரடி தமிழ் திரைப்படங்கள் நூறு. இது 2004-ம் ஆண்டைவிட 12 படங்கள் அதிகம். சென்ற ஆண்டு மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் 21. 2004-ம் ஆண்டில் 41. அந்நிய மொழி திரைப்படங்களின் மீதான மோகத்தை தமிழ்திரைப்படங்கள் கட்டுப்படுத்தியதன் வெளிப்பாடாக இதை கொள்ளலாம்.
தயாரிப்பில் முன்னேற்றத்தை கொண்டிருநதாலும் சமூகத்திலும் அரசியல் மட்டத்திலும் திரைப்படங்கள் சென்ற ஆண்டு எதிர்கொண்ட பிரச்சனைகள் இதுவரை சரித்திரம் அறியாதது.
'மும்பை X பிரஸ்' திரைப்படத்தின் பெயரை தமிழ்படுத்த வேண்டும் என தமிழ்பாதுகாப்பு கழகத்தின் எச்சரிக்கை பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. தொடர்ந்து போராட்டங்கள்... பேனர்கள் கிழிப்பு! எதிர்ப்புகளை மீறி கமல் பெயரை மாற்றாதது அவருக்கு பொருளாதார இழப்பு என்றாலும், தமிழ்சினிமாவுக்கு அதுவே கௌரவமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவின் பி.எஃப். (பெஸ்ட் பிரெண்ட்) படமும் எதிர்ப்புக்குள்ளாகி 'அ ஆ' என பெயர் மாற்றப்பட்டது.
நடிகைகளை விபச்சாரிகள் என்று கூறி பிரச்சனையில் சிக்கிக்கொண்டார் தங்கர்பச்சான். நடிகைகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதுவரை சென்றது இந்தப்பிரச்சனை.
கற்பு விஷயத்தை பேசி சிக்கலில் மாட்டிக்கொண்டார் குஷ்பு. இவருக்கு உதவ, "தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது?" என்று கேட்ட சுஹாசினியும் இப்போது கோர்ட் படியேறி வருகிறார்.
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா, பி. கண்ணாம்பாள், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோருக்கு தபால் தலை வெளியிடப்பட்டது. சென்ற வருடம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த கௌரவங்களில் ஒன்று இது.
2005-ல் அதிக திரைப்படங்களில் நடித்த ஹீரோ சத்யராஜ் (6), நடிகைகள் அசின், நமிதா (தலா 4 படங்கள்), அதிக படங்களில் சிரிக்கவைத்தவர் வடிவேலு (20).
நூறு படங்கள் வெளியானாலும் நூறு நாள்களை கடந்ததென்னவோ பதினேழு படங்கள்தான். இந்த பதினேழு படங்களையும் சேர்த்து முப்பத்தியேழு திரைப்படங்களே தயாரிப்பாளர் தலையில் துண்டு விழாமல் காப்பாற்றியிருக்கின்றன.
தமிழ்சினிமாவின் வீச்சு கர்நாடகா, ஆந்திரா, கேரளம் போன்ற தென்னிந்திய மாநிலங்களை ஊடுருவிய ஆண்டாக 2005-ஐ சொல்லலாம். தமிழில் வெளியான சந்திரமுகியும், அந்நியனும் ஆந்திராவின் அனைத்து நேரடி தெலுங்குப்படங்களின் வசூலையும் முறியடித்தன. வருட இறுதியில் வெளியான 'கஜினி' ஆந்திராவை அலற வைத்துக்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு மட்டும் 16 தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டுள்ளன.
வழக்கம்போல சென்ற ஆண்டும் தமிழ் திரையுலகினருக்கு மங்களகரமான ஆண்டுதான். சென்ற ஆண்டு தங்களது பேச்சிலர் வாழ்க்கையை துறந்த பிரபலங்கள் 10 பேர். பிரஷாந்த் கிரஹலட்சுமியை மணந்து கொண்டார். நடிகை மீரா வாசுதேவன் காதலித்து மணந்து கொண்டது ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலை. நடிகை காவேரி தெலுங்கு இயக்குனர் சூர்யகிரணையும், காமெடி நடிகர் முத்துக்காளை மாலதியையும் மணந்துகொண்டனர். டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவின் மணமகன் கஜுபரமேஸ்வரன் கேரளாவை சேர்ந்தவர். யுவன் ஷங்கர் ராஜாவின் லண்டன் காதலும் சென்றவருடம்தான் கல்யாணத்தில் முடிந்தது. இயக்குனர் ஏ.ஆ. காந்திகிருஷ்ணா, பாடகி பவதாரிணி, மகாநதி ஷோபனா ஆகியோரது திருமணங்களும் 2005-ல் நடைபெற்றது.
அமீரின் 'ராம்' திரைப்படம் இந்தியன் பனோரமாவில் தேர்வு செய்யப்பட்டது. இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன், பின்னணி பாடகி சித்ரா ஆகியோருக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.
வருட இறுதியில் வெளியான 'தவமாய் தவமிருந்து' தரத்திலும் நீளத்திலும் ஒரு மைல் கல். சென்ற வருடம் வெளியான திரைப்படங்களிலேயே சேரனின் படம்தான் அதிகநீளம் கொண்டது. மொத்தம் 5,456 மீட்டர்கள். இரண்டாமிடம் ஷங்கரின் அந்நியன், 4,473 மீட்டர்கள்.
காதல் மன்னன் ஜெமினி கணேசன், நடிகை தயாரிப்பாளர் இயக்குனர் இசையமைப்பாளர் என பன்முக ஆளுமை கொண்ட பி. பானுமதி, நகைச்சுவை எழுத்தாளர் ஏ. வீரப்பன் ஆகியோரது மறைவு திரையுலகம் சென்ற வருடம் சந்தித்த இழப்பு.
இளம் நடிகை சிந்துவின் மரணமும், இருபத்து ஒன்றே வயதான நடிகை ஷாலினியின் தற்கொலையும் சென்ற ஆண்டின் கறுப்பு நிகழ்வுகள் எனலாம்.
வருகிற 2006-ம் ஆண்டு இன்னும் சிறப்பாக இழப்புகள் அற்றதாக இனிமை நிறைத்ததாக அமையட்டும்!
|
Feedback!
|
|