
Written by: JBR
2006-ம் வருடத்தின் முதல் ஆறு மாதங்களை வெற்றிகரமாக கடந்திருக்கிறது தமிழ் சினிமா. வி.சி.டி.யை ஒழிப்பதில் அரசு காட்டிய தீவிரம், தொலைக்காட்சி மெகா தொடர்களின் மீது ஏற்பட்டிருக்கும் சலிப்பு ஆகியவை இந்த ஆறுமாத தமிழ் சினிமாவில் பிரதிபலிப்பதை காணலாம்.
சென்ற வருடம் முதல் ஆறு மாதங்களில் வெளியான தமிழ் படங்களின் எண்ணிக்கை நாற்பத்தைந்து. இந்த வருடம் மூன்று குறைந்து இது நாற்பத்தியிரண்டாகியிருக்கிறது.
எண்ணிக்கை குறைந்தாலும் படங்களின் வெற்றி சதவீதம் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான திருப்பம். சென்ற வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்தவை 'சந்திரமுகி'யும், 'அந்நியனும்.' இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'திருப்பாச்சி.' இவைதவிர, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஆர்யா, நவ்தீப் நடித்து வெளிவந்த 'அறிந்தும் அறியாமலும்', ஜீவாவின் 'உள்ளம் கேட்குமே', லிங்குசாமியின் 'சண்டக்கோழி' ஆகியவை தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தன.
2006- ஐ பொறத்துவரை இதை சின்ன பட்ஜெட் படங்களின் பொற்காலம் எனலாம். மெகா பட்ஜெட் படங்களான 'பரமசிவன்', 'ஆதி' போன்றவை சுமாரான வசூலையே பெற்றன. அதேநேரம் ஒன்றரை கோடி முதல் மூன்றரை கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான பலப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. 'டிஷ்யூம்', 'சித்திரம் பேசுதடி', 'பட்டியல்', 'திருட்டு பயலே', 'தலைநகரம்' 'கொக்கி', 'பாரிஜாதம்' என ஏழு படங்கள் இந்த ஆறுமாத காலத்தில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் 'பட்டியல்' தவிர்த்த மற்ற திரைப்படங்கள் குறைந்த முதலீட்டில் அதாவது 1.5-3.5 கோடிகளில் தயாரானவை. வித்தியாசமான கதைக்களம், யதார்த்தமான காட்சிகள், இணக்கமான நடிப்பு ஆகியவையே இந்தப் படங்கள் வெற்றிபெற காரணங்கள் என்கிறார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
சென்ற வருடம் மெகா பட்ஜெட் படமான 'அந்நியன்' திரைப்படத்தை தயாரித்த இவரே, இந்த ஆறு மாத காலத்தின் நாயகன். இந்த வருடம் இவர் தயாரிப்பில் 'டிஷ்யூம்' படம் மட்டுமே வெளியானது. ஆனால், 'சித்தரம் பேசுதடி', 'தலைநகரம்' மற்றும் 'பாரிஜாதம்' படங்கள் விலைபோகாமல் ரிலீசுக்கு தத்தளித்துக் கொண்டிருந்தவேளை அவற்றை வாங்கி, தனது விளம்பர யுக்தியின் மூலம் அனைத்துப் படங்களையும் வெற்றிப்படமாக்கினார்.
'சித்திரம் பேசுதடி' ரிலீஸாகி இரண்டு வாரங்கள் ஓடியபிறகு கலெக்ஷ்ன் இன்றி தயாரிப்பாளரால் நஷ்டத்தை தாங்கமுடியாமல் ரவிச்சந்திரனுக்கு விற்கப்பட்டது. இவருக்கு ஏன் இந்த வீண் வேலை என்று பலர் அப்போது கருத்து தெரிவித்தனர். ஆனால், 'வாளமீன்...' பாடலை பிரபலப்படுத்தி அதன் மூலம் 'சித்திரம் பேசுதடி'யை ஊர் பேசவைத்தார் ரவிச்சந்திரன். படமும் பம்பர் ஹிட்டானது.
இதேபோன்று 1.35 கோடியில் தயாரான 'தலைநகரம்' படம் வாங்க ஆளில்லாமல் தடுமாறியபோது 1.30 கோடிக்கு அதனை வாங்கி தமிழ்நாடு முழுக்க ரிலீஸ் செய்தார். நகரங்களில் இந்தப் படத்திற்கு வரவேற்பு குறைவாகவே இருந்தது. உதாரணமாக சென்னையில் இப்படம் முப்பது லட்சத்துக்கும் குறைவாகவே வசூலித்தது. ஆனால், NSC எனப்படும் வடாற்காடு, தென்னாற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இப்படம் நாற்பது நாளில் ஒன்றே கால் கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனைப் படைத்தது. பி அண்டு சி சென்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் 'தலைநகரம்' ரவிச்சந்திரனுக்கு ஐந்து கோடி அளவுக்கு லாபமும் சம்பாதித்துக் கொடுத்தது.
'திருட்டு பயலே' படம் 3.5 கோடியில் தயாரானது. இதுவரை இப்படம் எட்டு கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. "வித்தியாசமான கதையும், காட்சியும், ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வாலின் சிறந்த நடிப்புமே இதற்கு காரணம்" என்கிறார் இப்படத்தின் இயக்குனர் சுசி. கணேசன். இன்னும் இந்தப் படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை தக்க வைத்துள்ளது.
இந்த ஆறுமாத கால தமிழ்சினிமாவின் அதிசயம் என்றால் அது பாக்யராஜின் 'பாரிஜாதம்.' சின்ன கதை, சிக்கலான ஆனால் தெளிவான திரைக்கதை, சின்னச் சின்ன சென்டிமெண்ட்ஸ் என 'பாரிஜாதம்' ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஈர்த்துள்ளது. படம் வெளியாகி பல வாரங்கள் கடந்த பிறகும் சென்னை மல்டிபிளிக்ஸ் தியேட்டர்களில் தினம் ஐந்து காட்சிகள் காட்டப்படுவது 'பாரிஜாதம்' வெற்றிக்கு ஒரு சோறு பதம் உதாரணம்.
ஒட்டுமொத்தமாக இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான காலம் என்றால் அது மிகையில்லை. மேலும், சில படிப்பினைகளையும் இந்த ஆறுமாத கால சினிமா நமக்கு தந்திருக்கிறது.
மெகா பட்டஜெட், மெகா ஸ்டார் என்பதற்கு அல்ல, நல்ல கதைக்கும் நல்ல ஸ்கிரிப்டுக்குமே மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது. இவை இரண்டும் நல்ல விதமாக அமைந்தால் சின்ன நடிகர், புதுமுகம் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல என்பது இன்னொரு படிப்பினை.
'சித்திரம் பேசுதடி', 'தலைநகரம்' மற்றும் 'பாரிஜாதம்' தந்த தைரியத்தில் மேலும் ஆறு சின்ன பட்ஜெட் படங்களை வாங்கி ரிலீஸ் செய்ய இருக்கிறார் ரவிச்சந்திரன். இதில் மூன்று திரைப்படங்கள் புதுமுகங்கள் நடித்தவை!
கடந்த ஆறு மாதங்களை போல வரப்போகிற மாதங்களும் தமிழ் சினிமாவுக்கு சிறப்பாக அமைய அதிக வாய்ப்புள்ளது. கமலின் 'வேட்டையாடு விளையாடு', சூர்யாவின் 'ஜில்லுனு ஒரு காதல்', வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' (இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது) விஷாலின் 'திமிரு', விக்ரமின் 'பீமா', சிம்புவின் 'வல்லவன்', ஆர்யாவின் 'வட்டாரம்', ஜீவாவின் 'அரண்' மற்றும் 'ஈ', ஜெயம் ரவியின் 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' உள்பட ஏராளமான படங்கள் இந்த வருடம் ரிலீஸாக உள்ளது. ஆகவே சென்ற ஆண்டைவிட 2006-ல் அதிக படங்கள் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை வளப்படுத்தும் என்பது திண்ணம்!
|
Feedback!
|
|