Home |  Videos |  Gallery |  News |  Reviews & Previews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  
 
  -26.06.2007
   Home  | Interviews  | Gallery Click here for New Movie pics!




   Written by:  JBR



அது என்ன அசல் கலைஞர்கள்?

இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியானது யதார்த்த உலகை மிகை யதார்த்த (hyper reality) உலகமாக மாற்றியுள்ளது. பங்கு சந்தையில் எப்படி உற்பத்திக்கு சம்பந்தமில்லாதவர்கள், உற்பத்திக்கு சம்பந்தமில்லாத வகையில் பங்குகளின் விலையை தங்களின் தேவைக்கேற்ப உயர்த்தவோ குறைக்கவோ செய்து ஒரு மாய யதார்த்தத்தை உருவாக்குகிறார்களோ அதுபோல.

காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் மிகை யதார்த்தத்தை தோற்றுவிக்கும் ஊற்றுக் கண்கள். சமூகவியலாளர் ஃபியர் பூர்த்தியூ கூறியது போல் இவை யதார்த்தத்தை சொல்பவை என்ற நிலையிலிருந்து விலகி யதார்த்தத்தை உருவாக்குபவைகளாக மாறியுள்ளன. எங்கோ ஓரிடத்தில் நாலுபேர் செய்யும் கலகத்தை, நாடே செய்யும் கலகமாக இவை மாற்றுகின்றன. நாலுபேரின் பிரச்சனையை புத்திசாலித்தனமாக நாட்டின் பிரச்சனையாக இவை உருமாற்றி அதில் வெற்றியும் பெற்று வருகின்றன.

கலையிலும் உண்டு இந்த கைங்கரியம். பரபரப்பை தக்க வைத்துக் கொள்ள ஊடகங்களுக்கு செலிபிரிட்டிகள் தேவை. அவர்களின் சின்ன அசைவையும் பெரிதாக மிகைப்படுத்தி பார்வையாளர்களை மிரட்சியுற வைக்கிறார்கள். ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் திருமணத்தை நியூஸ் சேனல்கள் ஒரே நாளில் நூறுமுறைக்குமேல் ஒளிப்பரப்பின. அன்றைய தினம் சேனல்களை டியூன் செய்யாதவர்கள் இருந்த யதார்த்த உலகம் வேறு. சேனல்கள் உருவாக்கி காட்டிய உலகம் வேறு. கேன்ஸ் திரைப்படவிழாவில் நடிகைகள் அணிந்திருந்த ஆடைகளுக்கு கிடைத்த கவரேஜ் கேன்ஸில் பரிசு வாங்கிய இயக்குனருக்கு கிடைக்கவில்லை. மிகை யதார்த்த உலகில் கலைஞர்கள் என்று தூக்கிப் பிடிக்கப்படுகிறவர்கள் அதிகமும் ஊடகங்களின் பரபரப்பு பசிக்கு தீனி போடும் பப்ளிசிட்டி வெளிச்சத்தில் இருப்பவர்கள். உண்மையான கலைஞர்களுக்கு மிகை யதார்த்த உலகில் இடமில்லை. ஆகவே, உண்மையான கலைஞர்களை வெறும் கலைஞர்கள் என்று குறிப்பிடுவது, தவறான நபர்களையும் இப்பட்டியலில் சேர்க்கும் அபாயத்தை கொண்டுள்ளது. ஆகவேதான், உண்மையான கலைஞர்களுக்கு முன் ஒரு அசலையும் சேர்க்க வேண்டிவர்களாயுள்ளோம்.



அசல் கலைஞர்கள் பிறருக்காக ஒருபோதும் சினிமா எடுப்பதில்லை. தங்களுக்காகவே எடுக்கிறார்கள். ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது அவர்களை சுவாரஸியப்படுத்தும், எது அவர்களை கைத்தட்ட வைக்கும் என யோசித்து அவர்கள் காட்சிகளை அமைப்பதில்லை. தாங்கள் எடுத்துக் கொண்ட கருப் பொருளுக்கு நேர்மையானவற்றை மட்டுமே காட்சிகளாக்குகிறார்கள். அசல் கலைஞர்கள் தயாரிப்பாளர்கள் லாபம் பெறுவதற்காக படம் எடுப்பதாக ஒருபோதும் கூறுவதில்லை. திரையரங்கு உரிமையாளர்களை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. சினிமா அவர்களுக்கு வியாபாரமில்லை. புகழ்பெறுவதற்கான ஊடகமுமில்லை. சினிமா அவர்களின் கனவு. அவர்களின் வாழ்க்கை. அவர்களின் பேஷன். அவர்களின் madness -ம் அதுவே!

இந்த அசல் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் பகுதி இது. உலகத் திரைப்பட வரிசைபோல, அசல் கலைஞர்களும் இனி அடிக்கடி உங்களை சந்திப்பார்கள்.

அசல் கலைஞர்கள் வரிசையில் நாம் முதலில் பார்க்க இருக்கும் அப்பாஸ் கிராஸ்தமி சமகால ஈரானிய இயக்குனர்களில் முக்கியமானவர். 1940-ல் டெஹ்ரானில் பிறந்த இவரது 'டேஸ்ட் ஆஃப் செர்ரி' திரைப்படம் 1997-ம் வருடத்துக்கான கேன்ஸ் விருதினை பெற்றது. அகிரா குரோசவா இவரது படங்கள் சத்யஜித்ரேயின் படங்களுக்கு ஒப்பானவை என்கிறார்.

ஈரானில் தணிக்கை கடுமையானது. மூன்று அடுக்குகளை கொண்டது அங்குள்ள தணிக்கை. அதுகுறித்த அப்பாஸ் கிராஸ்தமியின் கருத்து பின்வருமாறு:

" தணிக்கையை ஈரானில் நாங்கள் சின்ன வயதிலிருந்தே எதிர்கொண்டு வருகிறோம். இது ஒரு இயக்குனருக்கு மட்டுமுள்ள பிரச்சனையில்லை. நான் ஒரு குடும்பத்தைப் பற்றி ஒரு கணவன் மனைவி குறித்து படமெடுப்பதை தவிர்ப்பேன். ஒரு கணவனையும் ஒரு மனைவியையும் ஒரு குழந்தையையும் வெவ்வேறு இடங்களிலிருந்து தருவித்து ஒரு குடும்பத்தை காண்பிக்க முடியும். ஆனால், என் வியூபைண்டர் வழியாக பார்க்கும்பேது அது நிஜமாக இருக்காது. ஒரு குழந்தை தன்னுடைய தாயின் தலைமுடியை பார்ப்பதோ, ஒரு கணவன் மனைவியின் தலைமுடியை பார்ப்பதென்பதோ நிஜவாழ்க்கையில் சகஜம். என் மனைவியோ, சகோதரியோ படுக்கையில் முக்காடு அணிவதில்லை. ஆனால், சினிமாவில் இதை காண்பிக்க முடியாது. (ஈரானில் பெண்களின் தலைமுடியை சினிமாவில் காண்பிக்க தடைஉள்ளது). ஆக, ஒரு குடும்பத்தை நிஜமாக என்னால் சினிமாவில் காண்பிக்க முடியாது.

எனது தந்தை எனது அம்மாவின் தலைமுடியை பார்த்திருப்பார். ஒரு குழந்தை அதனுடைய பாட்டியின் தலைமுடியை பார்த்திருக்கும். இதுதான் எனக்கு தெரிந்த வாழ்க்கை. சினிமாவில் தணிக்கை வலியுறுத்தும் வாழ்க்கை எனக்கு அறிமுகமில்லாதது. அறிமுகமில்லாத ஒன்றை நான் தொடுவதில்லை. அதனால் இயல்பாகவே நான் குடும்பங்களை காண்பிப்பதை தவிர்த்து எனது சினிமாவுக்காக கிராமங்களுக்கு செல்கிறேன்.

ஈரானுக்கு வெளியே என்னை சந்திப்பவர்கள் கேட்கும் இரண்டாவது கேள்வி அனேகமாக ஈரானில் உள்ள சென்ஸாரை பற்றியதாக இருக்கும். ஈரானின் குடிமகனாக சின்ன வயதிலிருந்தே ஒவ்வொருவரும் தணிக்கையை எதிர் கொள்கிறோம். சின்ன வயதில் எது நமக்கு நல்லது தீயது என்று பெற்றோர்கள் தீர்மானிக்கிறார்கள். பள்ளிகளில் இது இன்னும் அதிகம். பாடத்திட்டங்களிலும் தணிக்கை உண்டு. இயக்குனர்கள் மட்டுமின்றி எல்லா துறையினரும் தணிக்கையை எதிர் கொள்கிறார்கள். அதை எப்படி சமாளிப்பது என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


என்னுடைய ஆர்க்கிடெக் நண்பர், யாராவது அவரை அணுகினால் தான் கட்டியதில் மோசமான நிலையில் உள்ள கட்டிடத்தையே காண்பிப்பார். அதனால் அவரிடம் வருகிறவர் வேறொரு டிசைனை முயன்றுப் பார்க்கச் சொல்வார். தன்னுடைய கிரியேட்டிவிட்டியை இப்படி அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார். நான் ஈரானுக்கு வெளியே சென்சார் குறித்து பேசாததற்கு காரணம் பிரச்சனை வரும் என்று பயந்தோ, அரசாங்கத்துக்கு சாதகமாக நடக்க வேண்டும் என்பதற்காகவோ இல்லை. சென்சார் ஈரானில் எல்லோருடைய வாழ்க்கையில் இருக்கிறது என்பதால்தான்."

ஈரானில் அமெரிக்க சினிமாவை தடை செய்துள்ளார்கள். ஹாலிவுட் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் என்பதால் இந்த தடை. இதனை வேறுவிதமாக அணுகுகிறார் அப்பாஸ் கிராஸ்தமி.

" ஈரான் கலாச்சார முரண்கள் நிறைந்த நாடு. இங்கு ஜீன்ஸ் அணிந்து பள்ளி செல்ல முடியாது. ஆனால், அதே சிறுவன் தொலைக்காட்சியில் எம்.டி.வி. பார்க்கலாம். சினிமாவை தடைசெய்து தொலைக்காட்சியை அனுமதித்திருக்கிறார்கள். என்னுடைய விருப்பமெல்லாம் தொலைக்காட்சியின் இணைப்பை துண்டித்து அதனை அலமாரியில் வைத்து மூடி விடவேண்டும் என்பதுதான். இதை வெளிப்படையாக சொன்னால் தொலைக்காட்சிக்குப் பதில் என்னை அலமாரியில் வைத்து மூடிவிடுவார்கள்".

எல்லா கலைகளும் அரூபமான ஒன்றை கைப்பற்றவே முயல்கின்றன என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ள அப்பாஸ் கிராஸ்தமியின் படங்கள் உதவும். இவரது படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள், மவுனங்கள் அனைத்தும் யதார்த்தமானவை. அதேசமயம் இவற்றை தாண்டி நாம் பார்க்காத கேட்காத ஒன்றை உணர வைப்பவை என்ற வகையில் இவை பாவனைகளாகவும் ஒரே சமயத்தில் விளங்குகின்றன.

உதாரணமாக, 'டேஸ்ட் ஆஃப் செர்ரி' திரைப்படத்தில் ஒரு நடுத்தர வயது மனிதன் சிலரிடம் உதவி கேட்கிறான். மலைப்பாங்கான பகுதியில் அவன் ஒரு குழி தோண்டி வைத்திருக்கிறான். தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு அந்த குழியில் அன்றிரவு அவன் படுக்க இருக்கிறான். அவனுக்கு செய்ய வேண்டியதெல்லாம், மறுநாள் அந்த குழி அருகே வந்து அவன் பெயரை இருமுறை கூறி எழுப்ப வேண்டும். அவன் எழும்பவில்லை என்றால் அவன்மீது மண்ணைப் போட்டு மூடி விடவேண்டும். அதற்கு அவன் பெருந்தொகை தர தயாராக இருக்கிறான்.

அவன் உதவி கேட்கும் ராணுவத்தில் பணிபுரியும் சிறுவன், செமினாருக்காக ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருக்கும் இளைஞன் என எல்லோருமே பணத் தேவை மிகுந்தவர்கள். ஆனால், யாரும் அவனது தற்கொலை முடிவுக்கு உதவுவதாக இல்லை. ராணுவத்தில் பணிபுரிபவன் நடுத்தர வயது மனிதனின் கோரிக்கையை கேட்டு பயந்து ஓடுகிறான். செமினார் இளைஞன் குரானை மேற்கோள்காட்டி தற்கொலை தவறு, எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என வாதிடுகிறான். அவனது கோரிக்கைக்கு ஒத்துக் கொள்ளும் வயதான பேராசிரியரும், நாளை நீ நிச்சயம் உயிருடன் இருப்பாய் என கூறிச் செல்கிறார்.

பின்னணி இசை இல்லாமல் ஏறக்குறைய டாக்குமெண்ட்ரி போலிருக்கும் இந்தப் படத்திலும் அப்பாஸ் கிராஸ்தமியின் பிற படங்கள் போல கதை என்றும் எதுவும் இல்லை. ஒரு மனிதனின் ஒருநாள் வாழ்க்கையில் நிகழும் சில சந்திப்புகள், அவ்வளவே! ஆனால், இந்த காட்சிகள், உரையாடலுக்கு பின்னே கிராஸ்தமி உருவாக்கும் அதிர்வலை அழுத்தமானது.

ராணுவச் சிறுவன் குர்திஸ்தானை சேர்ந்தவன். அங்கு போர் என்பதும் கொலை என்பதும் சகஜம். சிறுவனும் சிறிது நாளில் தனது தொழில் நிமித்தம் தனக்கு அறிமுகமில்லாத பலரை கொலை செய்யப் போகிறான்.

செமினார் இளைஞன் ஆப்கானிஸ்தான் போர் காரணமாக அங்கு படிக்க இயலாமல் ஈரான் வந்தவன். செலவுகளுக்காக விடுமுறை நாளில் வேலை பார்ப்பவன்.

இவர்கள் இருவருக்குமே போர், கொலைகள் என்பவை வாழ்வோடு நெருக்கமானவை. இருவருமே போர் மிகுந்த சூழலில் இருந்து வந்தவர்கள். பணத்தேவை மிகுந்தவர்கள்.

இருந்தும் ஒரு மனிதனின் தற்கொலைக்கு உதவியாக இருப்பதற்கே அவர்கள் மனம் ஒப்பவில்லை. பணம் கிடைக்கும் என்ற நிலையிலும் அவர்கள் அந்த செயலுக்கு துணைபோகவில்லை. இதுதான் போர் மிகுந்த சூழலில் இருக்கும் சராசரி மனிதர்களின் இயல்பு என்றால் அவர்களை போர் செய்ய, அடுத்த மனிதர்களை கொலை செய்ய தூண்டுவது எது? அல்லது யார்?

வயதான பேராசிரியருடனான உரையாடலோ, வாழ்வின் ஆதார சுவை குறித்து வேறொரு அதிர்வலையை பார்வையாளர்களிடம் எழுப்புகிறது.

இப்படி காட்சிக்கு, உரையாடலுக்கு வெளியே அரூபமான உணர்வலைகளை எழுப்புவது கிராஸ்தமி படங்களின் சிறப்பம்சம்.

சரி, சினிமாவில் இவருக்கு பிடித்தது எது, பிடிக்காதது எது?

" எதெது எனது படங்களில் இருக்கிறதோ அது எனக்கு பிடித்தது. எதெது இல்லையோ அது எனக்கு பிடிக்காதது. சினிமாவில் எனக்கு கதை சொல்ல பிடிக்காது. அதனால் என்னுடைய படங்களில் கதை இருக்காது. அதேபோல் ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைப்பதும் எனக்குப் பிடிக்காது".

இன்றைய தேதிவரை, நல்ல கதை, பல இடங்களில் அழவைத்துவிட்டார் என்றுதான் நாம் படங்களை பாராட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதற்கு மாறுபட்டது படங்கள் குறித்த கிராஸ்தமியின் பார்வை. இதை எப்படி விளங்கிக் கொள்வது? நல்ல படங்கள் எவை என்பதற்கான அவரது விளக்கம் ஒருவேளை இதற்கு உதவலாம்.

"நல்ல படம் என்பது பார்க்கிறவருடைய சக்தி முழுவதையும் உறிஞ்சுவதாக இருக்க வேண்டும். திரையரங்கை விட்டு வெளியேறிய பிறகே அவர் தனது சக்தியை மீட்டெடுக்க வேண்டும்.

போரடிக்கிற நிறைய படங்கள் இங்கு உண்டு. ஆனால் அவை மரியாதைக்குரியவை. சில படங்களை பார்க்கவே முடிவதில்லை. சில என்னை தியேட்டரை விட்டே துரத்தியிருக்கிறது. ஆனால், அந்தப் படங்கள்தான் நடுஇரவில் எழுப்பி என்னை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. இந்த மாதிரி படங்களே எனக்குப் பிடித்தமானவை.

சில படங்கள் ஆணி அடித்த மாதிரி நம்மை நாற்காலியோடு உட்கார வைக்கும். ஆனால், இந்தப் படங்களை பார்த்து முடித்த பிறகு நாம் ஏமாற்றப்பட்டுவிட்டது தெரியவரும். பார்வையாளர்களை பிணைக் கைதிகளைப் போல் இப்படங்கள் திரையரங்கில் பிடித்து வைக்கின்றன. இந்தவகை படங்களை நான் விரும்புவதில்லை".

வாத்தியாரோட படம் பார்த்தா எனர்ஜி கிடைக்கும் என்று சிலாகிப்பவர்கள் இங்கு உண்டு. படங்களை எனர்ஜி பூஸ்டர்களாக பார்ப்பவர்களுக்கு மத்தியில், நல்ல படம் சக்தியை இழக்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்கிறார் கிராஸ்தமி.

மீடியா கலைஞர்களுக்கும், அசல் கலைஞர்களுக்குமான பிரதான வித்தியாசம் இது.

'சிவாஜி' வசனகர்த்தா சுஜாதா தனது பேட்டியொன்றில், "படம் பார்க்கிற இரண்டரை மணிநேரம் ரசிகர்கள் மனதில் கேள்வி எதுவும் வராமல் பார்த்துக் கொண்டால் போதும். படம் முடிந்த பிறகு லாஜிக் அது இதுனு ஆயிரம் பேசட்டும். படம் பார்க்கிறப்போ அந்த கேள்விகள் வராமல் இருக்கணும். இந்த பிளே ஷங்கருக்கு நல்லா தெரியும்" என, ரசிகர்களை ஏமாற்றுவதை ஒரு குவாலிட்டியாக பாராட்டி பேசினார்.

பார்வையாளர்களை பிணைக் கைதிகள்போல் பிடித்து வைத்து இரண்டரை மணிநேரம் ஏமாற்றுவது தவறு என்கிறார் ஒருவர். இன்னொருவர், இரண்டரை மணிநேரம் ஏமாற்று, அதற்குப் பிறகு ஏமாற்றியது தெரிந்தாலும் கவலையில்லை, (கல்லாவில் காசு சேர்ந்து விடும்) என்கிறார்.

மிகை யதார்த்த உலகில் மீடியாக்கள் சூப்பர் படம் என்றும் சூப்பர் கலைஞர்கள் என்றும் உயர்த்திப் பிடிப்பவர்களுக்கும் அசல் கலைஞர்களுக்குமான வித்தியாசம் இது.

Feedback!
Name:  
 
Email:  
 
Comments:  
 
   
 
Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies in Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hot Pictures 
Copyright 2006  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us