'சென்னை 600028' தொடங்கியபோது ஓரளவுக்கு என்னை அடையாளம் காட்டும் என்ற அளவிலேயே நம்பிக்கை இருந்தது. உலககோப்பையில் இந்தியா தோற்ற நேரம் பார்த்து படத்தை ரிலீஸ் செய்யவேண்டிய சூழ்நிலை வந்தபோது என்னிடமிருந்த நம்பிக்கை தொலைந்துபோனது.
இந்தியா தோற்றுவிட்ட இந்த நேரம் பார்த்து கிரிக்கெட் பற்றிய படத்தை மக்கள் ரசிப்பார்களா என்ற சந்தேகம் மனசை பிராண்ட ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் கொடுத்த தைரியத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம். ஆண்டவன் புண்ணியத்தில் மக்கள் தங்கள் ஆதரவை வாரி வழங்கிவிட்டனர். இப்போ உங்ககிட்ட பேட்டி கொடுக்குற அளவில் எனக்கு நல்ல பெயர் கிடைச்சுடுச்சு.
படத்தை பற்றி அப்பா (கங்கைஅமரன்) கருத்து கூறினாரா?
ரொம்ப சந்தோஷபட்டார். பரவாயில்லையடானு பாஸ்மார்க் போட்டார். ரஜினி சார் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது வெரி டிபரண்ட் வெங்கட் தோள்மேல் கைவைத்து வாழ்த்தினார். 'எப்படி இந்த ஸ்கிரிப்ட் உங்களுக்கு சாத்தியமாச்சு' என்று ஆச்சயரியப்பட்டு கைகொடுத்தார். பாரதிராஜா சாருக்கும் படம் ரொம்ப பிடித்திருந்தது. 'டேய்... நீயாடா அந்த படம் பண்ணுன? வித்தியாசமா இருக்குடா நீ இவ்வளவு அழகா டைரக்ஷ்ன் பண்ணுவேன்னு நினைச்சு பார்க்கல' என்று பரவசபட்டார். இவருடைய பாராட்டுகள்தான் எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருதாக நினைக்கிறேன்.
உதவி இயக்குனரா இல்லாமலேயே படத்தை தனியாக இயக்கும் தைரியம் எப்படி வந்தது?
அப்பா டைரக்ஷ்ன் பண்ணிக்கொண்டிருந்த காலத்தில் விளையாட்டு பிள்ளையாக படப்பிடிப்பையும் அப்பாவுடைய வேலையையும் வேடிக்கை பார்த்திருக்கிறேன். அதன் பிறகு படிப்பதற்காக வெளிநாடு போய்விட்டேன். லண்டனில் எட்டு வருஷம் படித்துக்கொண்டிருந்தபோது பார்ட்டைமாக தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலை பார்த்தேன். அப்போது எனக்குள்ளிருந்த இயக்குனரை உசுப்பேற்றிய ஹாலிவுட் படங்கள் நிறைய. அவைகள்தான் எனது குரு. ஸ்டீப்ன் ஸ்பீல் பெர்க் போன்ற இயக்குனர்களெல்லாம் என்னை பாதித்தவர்கள்.
இனி நடிக்கமாட்டீங்களா?
பெரிய ஹீரோக்களுக்கு ப்ரண்டா நடித்தபோது எனக்குள்ள திறமையை வெளிகாட்டவேண்டுமென்ற ஆதங்கம் இருந்தது. அதுதான் டைரக்ஷ்ன் ரூட்டு. அதை நிருபித்தும் காட்டிவிட்டதால் இனி டைரக்ஷ்னில்தான் என் கவனம் முழுவதும் இருக்கும். 'பூஞ்சோலை', 'வசந்தம் வந்தாச்சு' போன்ற படங்கள் நான் ஏற்கனவே நடித்து கொடுத்த படங்கள. இந்த படங்கள் மட்டும் வெளிவரும். இதுதவிர வாழ்த்துக்கள் படத்தில் நடித்திருக்கிறேன்.
அஜித்தை வைத்து படம் இயக்கபோவதாக செய்தி வந்ததே?
உண்மைதான். ஆனால் அது இப்போதைக்கு அல்ல. 'ஜி' படத்தில் அவருடன் இணைந்து நடித்தபோது அவரிடம் நிறைய கதை சொல்வேன். ரொம்ப நல்லாயிருக்குன்னு பாராட்டியிருக்கார். இப்போ ஒரு டைரக்டராகவும் ப்ரூப் பண்ணியதால் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. இதுதவிர தனுஷ் போன்ற பெரிய நடிகரெல்லாம் என்னிடம் பேசியிருக்காங்க. இருந்தாலும் என்னோட அடுத்த படம் புதுமுகங்களாதான் இருக்கும். அதில் 'சென்னை -28' நடிகர்களும் இருப்பாங்க.
ஸ்டைலே இல்லாமல் வெரைட்டியா படம் இயக்குவதே ஸ்டைல்தான். ஸ்ரீதர் மாதிரி வெவ்வேறான கதைகளை படமாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். காதல், கிரைம்னு கலந்துகட்டி அடிக்கணும். வரலாற்று சம்பந்தமான கதைகளை பண்ணணும். ஸ்பீல் பெர்க் இயக்கிய 'கூணிஸ்' மாதிரி குழந்தைகள் சப்ஜெக்ட் ஒண்ணு பண்ணணும் இதுதான் என் பிளான்.
'தேசிய நெடுஞ்சாலை 47' என்ற படத்தை தனுஷிற்காக வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதே டைட்டிலை நீங்கள் இயக்குவதாக பேச்சு அடிபடுகிறதே?
வெற்றிமாறனும் இதுபற்றி என்னிடம் பேசினார். 'N.H. 4' என்று 1998-ம் ஆண்டிலேயே ஒரு கதைக்கு இந்த டைட்டிலை நானும் யுகேந்திரன் உள்ளிட்ட எனது நண்பர்களும் சேர்ந்து வைத்தோம். ஆக முதலில் இந்த டைட்டிலை வைத்தது நான்தான். இதுபற்றி வெற்றிமாறனிடம் நான் விளக்கியுள்ளேன்.
ஹீரோவுக்காக கதை பண்ணும் காலம் இது. நீங்கள் எப்படி?
இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் மாஸ் ஹீரோக்களிடம் அவர்களது ரசிகர்கள் சிலவற்றை எதிர்பார்பபார்கள் எனவே அவர்களையும் திருப்திபடுத்தவேண்டிய பொறுப்பு இயக்குனர்களுக்கு இருக்கிறது. என்னை பொறுத்தவரை கதைக்கான ஹீரோவை தேர்ந்தெடுப்பதில்தான் எனக்கு உடன்பாடு.
குடும்பம்?
'ஒரே ஒரு மனைவி (சிரிக்கிறார்) நான்கு வயதில் ஸ்ரீஷிவானி என்ற பெண் குழந்தை அப்புறம் நான் என சிறுகுடும்பம் சீரான வாழ்வு என்று லைப் சூப்பரா போகுது'." விடை பெறுகிறார் வெங்கட்பிரபு.