
Written by: JBR
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு தனது முன்னாள் காதலனின் துணையுடன் கணவனை கொலை செய்துள்ளார் ஒரு பெண்.
திருமணமான பதினொராவது நாள் தேனிலவுக்கு சென்ற இடத்தில், தனது காதலனை வரவழைத்து கணவனை கொலை செய்துள்ளார் மற்றொரு பெண்.
இந்த இரு கொலைகளும் நிதானம் தவறிய கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்தவை அல்ல. திட்டமிட்டு கிரிமினல் மூளையுடன் நடத்தப்பட்டவை. மேலும், இந்த கொலைகளுக்குப் பிறகு தங்களுக்கும் நடந்த அசம்பாவிதத்திற்கும் சம்பந்தம் இல்லாத பாவனையில் அழுது ஒரு நாடகத்தை இவ்விரு பெண்களும் அரங்கேற்றியுள்ளனர்.
தமிழகத்தை உலுக்கிய இந்த கொலைகளுக்கு அடிப்படை காரணமென்ன? கணவனை கொலை செய்யும் அளவுக்கு இவர்களுக்கு துணிச்சலை கொடுத்தவை எவை? அல்லது யார்?
சமூகவியலாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், மகளிர் அமைப்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பல்வேறு காரணங்கள் கூறுகிறார்கள். மோசமான குழந்தை வளர்ப்பு, பெற்றோரின் வற்புறுத்தல், செக்ஸ் பிரச்சனைகள், மாறிவரும் சமூக அமைப்பு, கூட்டுக்குடும்ப சிதைவு... இத்யாதிகள்! இவர்கள் அனைவரும் தவறாமல் குறிப்பிட்ட மற்றொரு காரணம், தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள்!
முறை தவறிய உறவுகளை மையமாக வைத்து சினிமா தயாரிப்பது தற்போது அதிகரித்துள்ளது. இவ்வகை படங்கள் இதுபோன்ற உறவுகள் தவறானவை அல்ல என்ற கருத்தை சமூகத்தில் விதைக்கின்றன. இந்த உறவை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் துணிச்சலை இப்படங்கள் அளிக்கின்றன. இதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியான 'கலாபக் காதலன்', 'திருட்டு பயலே' மற்றும் 'உயிர்' படங்களை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
'கலாபக் காதலன்' படத்தில் அக்காள் கணவன் மீது இளம் பெண் ஒருத்திக்கு காதல் வருகிறது. எப்படி இது போன்ற ஒரு ஆசை ஏற்படுகிறது என்பதும், அதற்கான காரணமும் படத்தில் தீவிரமாக அணுகப்படவில்லை. மாறாக, அந்த இளம்பெண் தனது அக்காள் கணவரை 'செடியூஸ்' செய்ய முயலும் காட்சிகளே பிரதானப் படுத்தப்பட்டுள்ளது. கனவு பாடலில் இருவரும் அரை குறை உடைகளில் கட்டிப் புரளுகிறார்கள். இருவரும் 'தவறு' செய்துவிட்டதைப் போன்ற கனவு காட்சியும் படத்தில் இடம்பெறுகிறது.
'கலாபக் காதலன்' படத்தின் எந்த காட்சியும், அப்பெண்ணின் மோகம் தவறானது என்று சுட்டிக்காட்டும் முகமாக உருவாக்கப்படவில்லை. மாறாக, அப்பெண் தனது மோகத்தில் உறுதியாக இருப்பதை கொண்டாடுகிறது. படத்தின் இறுதியில், வற்புறுத்துதலின் பேரில் வேறொருவனை மணந்து கொள்ளும் அப்பெண் தனது ஆசை நிறைவேறாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறாள். சுற்றமும் நட்பும் அழுகிறது. தற்கொலையின் காரணம் தெரிந்த ஒரே நபரான அக்காள் கணவனும் அவளது துயர முடிவுக்காக வருத்தப்படுகிறார். இந்த உச்சக்கட்ட காட்சியை கொள்கையில் உறுதியாக இருக்கும் வீரனின் மரணத்தைப் போல கொண்டாடுகிறார் இயக்குனர். கணவன் இறந்ததும் அவன் சிதையில் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளும் பெண்ணை சிலர் கொண்டாடுகிறார்களே, அப்படி!
'திருட்டு பயலே' படத்தில் கணவனுக்கு தெரியாமல் அவன் நண்பனுடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார் மனைவி. சதா நேரமும் பிஸினஸ் என்று அலையும் கணவனும், படுக்கையறை வரை செல்லும் உரிமையுள்ள நண்பனின் அருகாமையும், அன்றாட வாழ்க்கையை பற்றி கவலையில்லாத பொருளாதாரமும் இப்படியொரு உறவு ஏற்பட களம் அமைக்கின்றன. இந்த திருட்டு உறவு மூன்றாவது நபருக்கு தெரிந்து, அது தனக்கு தலைவலியாக மாறும் போதுதான் தனது தவறை புரிந்து கொள்கிறார் மனைவி.
சுசி. கணேசன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கதாபாத்திரங்களின் உளவியல் நெருக்கடிகளுக்கு இணையாக இவ்வுறவினால் எழும் பௌதிக விளைவுகளும் (ஆள்வைத்து அடிப்பது, பிளாக் மெயில், கொலைகள்) முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளன. 'கலாபக் காதலன்', 'உயிர்' படங்களைவிட 'திருட்டு பயலே' விறுவிறுப்பாக தோன்ற இதுவே காரணம்.
இந்தத் திரைப்படத்திலும் கணவனுக்கு தெரியாமல் ஏற்படுத்திக் கொள்ளும் திருட்டு உறவு தவறு என்று சொல்லப்படவில்லை. தவறில் பங்கு கொள்ளும் ஆண்கள் அப்பெண்ணின் கணவனால் கொலை செய்யப்படுகிறார்கள். இதுபோன்ற தவறுகளுக்கு மரணம்தான் முடிவு என்று தனது படம் பாடம் கற்பிப்பதாக பெருமைபடுகிறார் சுசி. கணேசன். தவறுக்கு அல்ல தவறுகளால் ஏற்படும் விளைவுகளுக்கே பயப்படுங்கள் என்று கூறுவதுபோல் உள்ளது இவரது விளக்கம். உதாரணமாக, இப்படத்தில் வரும் கணவன் கொலை செய்யும் அளவுக்கு வலிமையற்றவனாக இருந்தால்? நிச்சயம் சுசி. கணேசன் வேறு ஸ்க்ரீன் ப்ளேதான் செய்ய வேண்டியிருந்திருக்கும்!
'உயிர்' படத்தின் கதை கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணியை பற்றியது. கொழுந்தனை அடைய கொதிக்கும் பாலை குழந்தை மீது ஊற்றுவதாக அண்ணி கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்களுக்கு ஏற்படாத வெறுப்பு உயிரில் வரும் அண்ணி கேரக்டர் மீது ஏற்படுகிறது. தவறு செய்கிறவர்களின் குற்ற உணர்வை இந்த பாத்திரப்படைப்பு அதிகரிக்கும். அதேநேரம், இதுபோன்ற தவறு செய்யும் ஆண்/பெண் மனதில், நான் இந்தளவுக்கு கடுமையானவன்/வள் இல்லை என்ற நிம்மதியை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
சுசி. கணேசன் உள்பட இது போன்ற படங்களை எடுக்கும் இயக்குனர்கள், கதைக்கான சம்பவத்தை செய்தித்தாளிலிருந்து சேகரிப்பதாக சொல்கிறார்கள். நாட்டில் நடப்பதையே படமாக எடுக்கிறோம் என்பது இவர்கள் வாதம். ஆனால், தவறு செய்கிறவர்களும், விமர்சகர்களும் சினிமாவைப் பார்த்தே சமூகம் கற்றுக்கொள்கிறது என வாதாடுகிறார்கள். முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையா என்ற இந்த விவாதம் ஒரு போதும் முடியப்போவது இல்லை என்பதால் நாம் அதற்குள் புகவேண்டாம்.
களவொழுக்கம் என்பது ஆதிகாலம் தொட்டே அதாவது சினிமா தோன்றுவதற்கு முன்பே இருந்து வரும் ஒன்று. அதனால் ஒட்டு மொத்தமாக சினிமாவின் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. அதேநேரம், இதுபோன்ற தவறுகளை மையப்படுத்தி தொடர்ச்சியாக சினிமாக்கள் வரும்போது, இவை சமூகத்தில் யதார்த்தமாக இருப்பவை என்ற தோற்றத்தை உருவாக்குவதுடன், இத்தவறுகள் நியாயமாக ஏற்படுத்தக்கூடிய குற்றவுணர்வை இல்லாமல் செய்துவிடுகிறது.
தவறுகள் இல்லாத சமூகம் ஒருபோதும் சாத்தியமில்லை. இந்த உண்மையின் பின்னணியில், தவறுகள் நடந்தால் அவை கொலை போன்ற க்ரைம்களாக மாறாமலிருக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிப்பதே ஆரோக்கியமான தீர்வாக இருக்கமுடியும். இதற்கு உதாரணம் கமலின் 'மும்பை Xபிரஸ்.'
இதன் நாயகி மனிஷா கொய்ராலா போலீஸ் அதிகாரி நாசரின் தாலி கட்டாத மனைவி. பத்து வயதில் இவர்களுக்கொரு மகன். மனிஷாவால் தனது சட்டப்பூர்வமான குடும்பம் பாதிக்கப்படுமோ என்ற கவலை நாசருக்கு. பணத்தை தவிர்த்து நாசர் மேல் மனிஷாவுக்கும் எந்த ஈடுபாடுமில்லை. இந்த சூழலில் இவர்கள் நடுவில் வருகிறார் கமல். இவருக்கு மனிஷா மீது காதல். மனிஷா ஏற்கனவே ஒருவரின் தாலிகட்டாத மனைவி என்பதோ ஒரு மகன் இருப்பதோ இவர் காதலுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். மனிஷா, நாசர், கமல், குட்டி பையன் நால்வருக்குமே நிம்மதி; ஆடியன்சுக்கும்!
உறவுகளின் ஸ்வரம் பிசகினாலோ, உறவு மீறல்கள் ஏற்பட்டாலோ அவை கொலை போன்ற பெரும் தவறுகளில் முடியாமலிருக்க கமலின் 'மும்பை X பிரஸ்' படமும் அவரது சொந்த வாழ்க்கையுமே சிறந்த உதாரணங்கள்!
|
Feedback!
|
|